இனி குத்தகை முறையில்தான் உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பால் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த முடிவு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள பணி இடங்களை உடனே நிரப்பவும் சிண்டிகேட் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாகவே குத்தகை முறையில் ஆட்களை நியமிப்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் யோசித்து, நியமித்தும் வந்தது. எனினும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மட்டுமே அவ்வாறு நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.


இனி அவுட்சோர்சிங் முறை மட்டுமே


இந்த நிலையில் தற்போது ஆசிரியர்களும் அவ்வாறு நியமிக்கப்பட உள்ளனர். இதனால் புதிதாக மேற்கொள்ளப்படும் உதவிப் பேராசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் உள்ளிட்டோரின் நியமனம், தினக்கூலி அல்லது தொகுப்பூதியத்தின் அடிப்படையில் அவுட்சோர்சிங் மூலமாக மட்டுமே நடக்க உள்ளது.


இதையும் வாசிக்கலாம்: CBSE Board Date Sheet: 10, பிளஸ் 2 தேர்வு தேதிகளை அறிவித்த சிபிஎஸ்இ: முக்கிய விதிமுறைகள் இவைதான்!


ஆசிரியர்களும் கல்வியாளர்களும் அதிர்ச்சி


இந்த அறிவிப்பு காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் இனிமேல் நிரந்தர உதவிப் பேராசிரியர்களோ, ஊழியர்களோ நியமிக்கப்படாத சூழல் ஏற்பட்டுள்ளது.  இதனால், ஆசிரியர்களும் கல்வியாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித் தரம் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 


தெரிய வந்தது எப்படி?


அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பதிவாளர் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள், மையங்களின் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.