Seeman Rajinikanth: விஜய்க்கு எதிரான ரஜினியின் ரசிகர்களை தன் பக்கம் இழுக்க, சீமான் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.


ரஜினியை சந்தித்த சீமான்:


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாட்டை துரைமுருகன், ”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த அண்ணன் சீமான் !” என குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து, புலி மற்றும் கழுகு சேர்ந்து இருப்பதை போன்ற ஒரு புகைப்படத்தையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருப்பதோடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.



ரஜினி - சீமான் பேசியது என்ன?


ரஜினி மற்றும் சீமான் இடையேயான பேச்சுவார்த்தை ஒருமணி நேரம் வரை நீண்டதாக கூறப்படுகிறது. இதில் தமிழக அரசியல் சூழல், விஜயின் அரசியல் பயணம், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தல் மற்றும் திமுக ஆட்சி என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.


சண்டை டூ இணக்கம்:


ரஜினி அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்தபோது, சீமான் அதற்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தார். தமிழ்நாட்டை ஒரு தமிழனே ஆள வேண்டுமென எதிர்ப்புக்குரல் எழுப்பி, ரஜினியை கன்னடர் என்ற பொருபடும் விதமாகவும் சாடினார். இதனால், ரஜினி ரசிகர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இடையே சமூக வலைதளங்களில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் தான், ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தில், போலி என்கவுண்டர் குறித்து பேசியிருந்ததை சீமான் பாராட்டினார். இதையடுத்து, சீமானை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தத ரஜினி, நேரில் பேச விருப்பமும் தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையிலேயே ரஜினி மற்றும் சீமான் இடையேயான சந்திப்பு அரங்கேற்யுள்ளது.


விஜய்க்கு எதிராக ஆதரவு திரட்டும் சீமான்?


தேர்தலில் தொடர்ந்து தனித்து போட்டியிட்டு வரும் சீமானின் நாம் தமிழர் கட்சி, அமைப்பு ரீதியாக பின்னடைவை சந்தித்து வருகிறது. மாவட்ட செயலாளர்கள் போன்ற நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதையும் காண முடிகிறது. அதோடு, சீமான் பின்பு திரண்ட இளைஞர்கள் தற்போது, புதியதாக தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள விஜய் பக்கம் அணி சேர தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விஜயை தொடர்ந்து சீமான் சரமாரியாக விமர்சித்து வருகிறார். இந்த சூழலில் தான், ரஜினியை சந்தித்து நட்பு பாராட்டி, சீமான் தனக்கு ஆதரவு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. காரணம் இன்றைய சூழலில் தமிழ் சினிமா துறையில் விஜயின் நேரடி போட்டியாளராக இருப்பது ரஜினி மட்டுமே. எனவே, அவருடன் நெருக்கம் காட்டுவது தனக்கு பலனளிக்கும் என சீமான் நம்புவதாக தெரிகிறது. 


காக்கா - கழுகு மோதல்:


ஜெயிலர் பட இசைவெளியிட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. விஜயை தான் ரஜினி காக்கா என மறைமுகமாக சாடியதாகவும் கூறப்பட்டது. அதோடு, ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களின் மோதல் என்பது, சமூக வலைதளங்களில் முடிவில்லா போராக தொடர்கிறது. இந்நிலையில், தான் சாட்டை துரைமுருகன் கழுகு மற்றும் புலி சேர்ந்துள்ள படத்தை பகிர்ந்துள்ளார். இதன் மூலம், விஜய்க்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள ரஜினி ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்க, நாம் தமிழர் கட்சி முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அமைப்பு ரீதியாக ஏற்பட்டுள்ள பின்னடைவு, விஜய் பக்கம் திரும்பியுள்ள இளைஞர்களின் கவனம் ஆகியவற்றையும் ஈடுசெய்யவே, தான் கடுமையாக விமர்சித்து வந்த ரஜினியுடன் தற்போது சீமான் இணக்கம் காட்ட தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.