அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற ஒரு வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. 


இதன்படி 2001- 02 ஆம் ஆண்டு முதல் 3ஆவது செமஸ்டர் தேர்வில் இருந்து அரியர் வைத்திருப்போர் மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல 2002- 2003ஆம் ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வில் இருந்து அரியர் வைத்திருப்போர் மீண்டும் தேர்வெழுதலாம். அரியர் எழுதும் மாணவர்கள் தேர்வுக் கட்டணத்துடன், ஒவ்வொரு தாளுக்கும் கூடுதலாக ரூ.5,000 கட்டணம் செலுத்த வேண்டும். 


இதன்படி அரியர் வைத்துள்ள மாணவர்கள் நவம்பர் / டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் 2022-ன் கீழ் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று (நவம்பர் 23) முதல் தொடங்கி உள்ளது. இதற்கு டிசம்பர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். 


மாநிலம் முழுவதும் 9 பகுதிகளில் இவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. சென்னை லயோலா பொறியியல் கல்லூரி, விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரி, ஆரணி அரசு பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழக வளாகம், ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி அரசு பொறியியல் கல்லூரி (பிஐடி வளாகம்), மதுரை அண்ணா பல்கலைக்கழக வளாகம், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக வளாகம் ஆகிய இடங்கள் தேர்வு மையங்களாகச் செயல்பட உள்ளன. 




ஏராளமான பதிவெண்களைக் கொண்டுள்ள மாணவர்கள் டிடி (வரைவோலை) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிப்பது எப்படி?


* தேர்வர்கள் https://coe1.annauniv.edu/ என்ற இணையப் பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும். 
* அதில் தேவைப்படும் தேர்வு மையத்தைத் தெரிவு செய்ய வேண்டும். 
* அதற்குப் பிறகு தேர்வு மையத்தை மாற்ற முடியாது என்பதால், சரியான தேர்வை இறுதி செய்ய வேண்டும். 
* அரியர் எழுத வேண்டிய பாடப் பிரிவையும் தேர்வு செய்ய வேண்டும். 
* ஆன்லைன் மூலம் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். டிடி வழியாகச் செலுத்தும் தேர்வர்கள், “Controller of Examinations, Anna University, Chennai — 600 025” என்ற பெயரில் தொகையைச் செலுத்த வேண்டும். 


 






கூடுதல் தகவல்களுக்கு: https://coe1.annauniv.edu/aucoe/pdf/2022_nd/Notification_emps_nov_dec_2022.pdf