அண்ணா பல்கலைக்கழகத்தின் 46ஆவது பட்டமளிப்பு விழாவில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பெற்றுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

Continues below advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தின் 46வது பட்டமளிப்பு விழா இன்று 04.02.2026 (புதன்கிழமை) 11.00 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக வேந்தர் ஆர்.என்.ரவி விழாவிற்கு தலைமை தாங்கி பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்குகிறார்.

பங்கேற்காத உயர் கல்வி அமைச்சர்

எனினும் விழாவில் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக இணைவேந்தர் முனைவர் கோவி. செழியன் விழாவில் பங்கேற்கவில்லை.

Continues below advertisement

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ விருது பெற்ற முனைவர் மயில்சாமி அண்ணாதுரை முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுவார்.

தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கூட்டுநர் குழு தலைவர் முனைவர் சங்கர் அனைவரையும் வரவேற்று பல்கலைக்கழகத்தின் சிறப்பு செயல்பாடுகள் பற்றிய அறிக்கையை வழங்குவார்.

எத்தனை பேருக்கு பட்டம்?

மொத்தமாக 1,50,495 மாணவர்கள் இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை பெறுகிறார்கள். இவர்களில் 753 ஆராய்ச்சி மாணவர்கள் முனைவர் பட்டமும் 66 இளநிலை பட்ட மாணவர்கள் பட்டமும் பதக்கமும் நேரில் பெறுகிறார்கள். மீதமுள்ள 881 ஆராய்ச்சி மாணவர்கள் முனைவர் பட்டமும் 1,48,795 மாணவர்கள் பட்டமும் நேரில் வரா நிலையில் பெறுகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மரபு மீறல்?

இந்த நிலையில், பட்டமளிப்பு விழாவில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டுள்ளது சர்ச்சைகளை கிள்ப்பியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் அதற்கு அடுத்தே தேசிய கீதமும் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மரபு மீறல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.