திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கோட்டூர் கிராமம் உள்ளது. இங்கு பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கோட்டூர் தேவி நாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பாரம்பரியமாக விவசாயம் செழிப்படைய வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வாரம் ஊரில் உள்ள சிறுமிகளில் இருந்து, எட்டு நாள் வழிபாட்டில் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜெய ராமச்சந்திர மூர்த்தி மகாலட்சுமி தம்பதியின் 13 வயது மகள் ஜியா ஸ்ரீ என்ற சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டாள். இதைத்தொடர்ந்து நிலா பெண்ணாக தேர்வு செய்த ஜியா ஸ்ரீ என்ற சிறுமியை கிராம பெண்கள் நேற்று இரவு ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்கு அழைத்துச் சென்று, ஆவாரம் பூக்களை கொண்டு அலங்காரம் செய்தனர்.
அதன்பின்னர் ஆவாரம் பூக்கள் நிரம்பிய கூடையை சுமந்தபடி சிறுமியை ஊர்வலமாக ஊருக்குள் அழைத்து வந்தனர். அதன் பின்னர் நிலா பெண்ணை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று தோழிகளுடன் அமர வைத்தனர். அங்கு பெண்கள் கும்மியடித்து விடிய,விடிய பாட்டு பாடி சிறுமியை சுற்றி வந்தனர். பின்னர் மாசடச்சி அம்மன் கோவிலுக்கு சிறுமியை அழைத்து வந்தனர். அங்கு சிறுமியின் முறை மாமன்கள் சேர்ந்து பச்சை தென்னை மட்டையால் குடிசை அமைத்து அதில் சிறுமியை அமர வைத்து சடங்குகள் செய்தனர். அதனைத்தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து நிலா பெண்ணிற்கு சீர் செய்தனர்.
அதன் பின்னர் ஊர் எல்லையில் உள்ள கிணற்றுக்கு அழைத்துச் சென்று கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களை கிணற்றில் உள்ள தண்ணீரில் போட்டு, மண் கலயத்தில் விளக்கு ஏற்றி தண்ணீரில் மிதக்க விட்டு, வழிபாடு நடத்திய பின்னர் கிராம மக்கள் ஊர் திரும்பினர். அந்த விளக்கு ஏழு நாட்கள் அணையாமல் எறிந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த வினோத வழிபாட்டை கிராம மக்கள் நடத்தி வருகின்றனர்.