கோடை விடுமுறை என்பது மாணவர்களை அவர்களின் இஷ்டத்துக்கு விடக்கூடிய காலமாக இருக்கவேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:


’’கோடை விடுமுறை என்பது மாணவர்களை ஆசுவாசப்படுத்தக்கூடிய காலம். அப்போது மாணவர்கள் நீச்சல் கற்கலாம். கணினிப் பயிற்சிக்குச் செல்லலாம். விளையாட்டு போன்ற திறமைகளுக்கான காலமாக கோடை விடுமுறையை மாணவர்கள் பயன்படுத்துங்கள். 


கோடை விடுமுறை என்பது மாணவர்களை அவர்களின் இஷ்டத்துக்கு விடக்கூடிய காலமாக இருக்கவேண்டும். விடுமுறை காலத்திலும் மாணவர்களுக்குப் பாடங்களை நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும். இதை வேண்டுகோளாக முன் வைக்கின்றேன். பெற்றோர்களும் மாணவர்களை அழுத்தத்தில் தள்ளக்கூடாது என்று கோரிக்கை வைக்கிறேன். ஏனெனில் பெற்றோர்களே விடுமுறையில் வகுப்புகளுக்குச் செல்லட்டும் என்று சொல்வதை நானே கண்கூடாகப் பார்க்கிறேன். இந்த விடுமுறை நாட்களே, அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்கள் படிப்பதற்கான உந்து சக்தியாக இருக்கும்.


மாநிலத்தில் இந்த மாணவி முதலிடம், இந்த மாணவர் இரண்டாமிடம் என்று விளம்பரப்படுத்துவது வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் உற்சாகப்படுத்துவது அவசியம்தான். அதற்காக வெட்டவெளியில் விளம்பரப்படுத்துவது தவறு. இது பிற மாணவர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும். இதுகுறித்துப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்’’. 


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 




தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் லியோனி கூறும்போது, ’’1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்தம் 3.56 லட்சம் கோடி புத்தகங்கள் தேவைப்படுகின்றன. இந்த புத்தகங்கள் அனைத்தும் முதன்மைக் கல்வி அலுவலர்களின் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.


தனியார் பள்ளிகளுக்கு வழங்க, தமிழ் பாடப் புத்தகங்கள் 10 சதவீதம் அதிகமாக அச்சிடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, பாட நூல்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு வழக்கத்தைவிட 20 சதவீதம் அதிக அளவில் மாணவர் சேர்க்கை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்று லியோனி தெரிவித்தார். 


பள்ளிகள் திறப்பு எப்போது?


வெயில் சுட்டெரிப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 7ஆம் தேதிக்கு மாற்ற வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாகத் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி இன்று (மே 26) அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்த நிலையில், தற்போது இவ்வாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.