தாங்கள், படித்த பள்ளிக்காக 7 லட்சம் அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைந்து விழுதுகள் என்ற திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யோசனையை ஏற்று பள்ளி மேலாண்மைக் குழுவில் முன்னாள் மாணவர்களையும் உறுப்பினராக விரைவில் சேர்ப்போம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


அரசுப் பள்ளிகளில் பயின்று இன்று உலகெங்கும் பல்வேறு துறைகளில் பல நாடுகளில் பணியிலிருக்கும் முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்களை  ‘’விழுதுகள்’’ என்கிற பெயரில் ஒருங்கிணைக்கும் முன்னெடுப்பை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சியின் பலனாக 34,381 பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 7 லட்சம் முன்னாள் மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையோடு ஆர்வத்துடன் பதிவு செய்து தங்களை இணைத்துக் கொண்டனர்.


இந்த முன்னாள் மாணவர்களில் 4 லட்சம் முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த உதவிகள் செய்ய முன்வந்துள்ளனர். இரண்டு லட்சம் பேர் தன்னார்வலர்களாக செயலாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். 96 நாடுகளைச் சேர்ந்த 2,557 மாணவர்கள் தங்கள் பள்ளிகளோடு மீண்டும் தங்களை இணைத்துக்கொண்டு தான் படித்த பள்ளிகளின் முன்னேற்றத்தில் பங்கேற்க உறுதி பூண்டுள்ளனர்.
இதற்கான தொடக்க விழாவையும் முன்னாள் மாணவர்கள் அமைப்பிற்கான இலச்சினை வெளியீடும் சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது.


குறுந்தகடு வெளியீடு


 இவ்விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். "விழுதுகள்" நிகழ்வைத் தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட "சமூகநீதி" உள்ளிட்ட பொருண்மைகள் சார்ந்த 10 பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார்.


 


முன்னாள் மாணவர்களுக்கான இந்த மாநாடு அரசுப் பள்ளிகளில் படித்த கோடிக்கணக்கான மாணவர்களை மீண்டும் ஒன்று திரட்டவும், அவர்களுடைய பங்களிப்போடு அரசுப் பள்ளிகளை முன்னேற்றவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அவர்கள் ‘’அரசுப் பள்ளிகளுக்கு தாங்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டிலும் வளர்ச்சியிலும் உடன் நின்று உதவுவோம், பள்ளிக்கு செய்வதை உதவியாகக் கருதாமல் கடமையாக கருதுவேன்’’ என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.


பெற்ற தாய்க்கு நிகரான பள்ளி


நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,‘பெற்ற தாய்க்கு நிகரான பள்ளிக்கு சேயாக இருந்து கடமையை ஆற்ற வேண்டும் என்று இங்கே பலர் வந்திருக்கிறார்கள்.


முன்னாள் மாணவர்கள், தான் படித்த பள்ளிக்கு உதவுவதை ஒரு உதவியாக இல்லாமல் கடமையாக நினைத்து செயலாற்ற வேண்டும். ஏழு லட்சம் முன்னாள் மாணவர்கள் நம்மோடு இங்கே இணைந்திருக்கிறார்கள் என்பதே இந்த விழுதுகள் அமைப்பின் முதலாவது பெரிய வெற்றியாக பார்க்கிறேன். இது தமிழ்நாடு அரசின் மீதும் முதல்வர் மீதும் வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையாகவே பார்க்கிறோம்.


படித்த அரசுப் பள்ளிக்காக பல்வேறு பணிகள்


ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். அங்கே சென்றபோதெல்லாம் முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பாக ஒவ்வொரு பள்ளிக்கும் செய்யப்பட்ட உதவிகளை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கும். புதுகோட்டையில் ஒரு கிராமத்துப் பள்ளியில் மாலை நேரப் பயிற்சி வகுப்புகளை முன்னாள் மாணவர்கள் நடத்துகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பள்ளிக்காக பேருந்து வாங்கிக் கொடுத்துள்ளார். மதுராந்தகத்தில் முன்னாள் மாணவர்கள் சேர்ந்து பல்வேறு பணிகள் செய்துள்ளனர். விருத்தாச்சலத்தில் அரசுப்பள்ளிக்காக ஒரு கலையரங்கத்தையே கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். பட்டியலிட முடியாத அளவுக்கு அத்தனை விஷயங்களை செய்துள்ளனர்.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யோசனையை ஏற்று பள்ளி மேலாண்மைக் குழுவில் முன்னாள் மாணவர்களையும் உறுப்பினராக விரைவில் சேர்ப்போம்.’’ என்று அமைச்சர் அன்பில் தெரிவித்தார்.


அதைத் தொடர்ந்து  சமூக விடுதலையை அடிப்படையாகக் கொண்ட சமத்துவம் பேசும் 10 பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்பு வெளியீடு நிகழ்ந்தது.  அதில் 'சமூக நீதி' பாடலை அரசுப் பள்ளி மாணவர்கள் பாடினர்.    இது ஆறு எழுத்தாளர்கள், பத்து இசையமைப்பாளர்கள் இதில் பங்களித்துள்ளனர்.