ஆன்லைன் அரியர் தேர்வின்போது மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தேர்ச்சி இல்லை என்று அறிவித்தது சர்ச்சையாகி உள்ளது. இதற்கிடையே நிர்வாகம் தேர்வை முறையாக நடத்தாமல், தங்கள் மீது அபாண்டமாகப் பழிசுமத்துவதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 4-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (டிச.6) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடந்தது என்ன?
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள், 29 இணைப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டு மற்றும் 2019-20 ஆம் கல்வியாண்டு மாணவர்களில், செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக அரியர் தேர்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் முறையில் எழுத்துத் தேர்வும், நேரடி முறையில் செய்முறைத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருந்து ஆயிரணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகளை வேளாண்மைப் பல்கலைக்கழகம் டிசம்பர் 2-ம் தேதி வெளியிட்டது.
இதில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் டிசம்பர் 4-ம் தேதி பல்கலைக்கழகத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் பெயர்கூற விரும்பாத மாணவர், 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
''2017 - 2021 வரை வேளாண்மை படித்த மாணவர்கள் நாங்கள். பல்கலைக்கழக விதிகளின்படி ஆண்டுக்கு 3 முறை அரியர் தேர்வை நடத்த வேண்டும். நாங்கள் இரண்டாம் ஆண்டு படிக்கும் வரை அரியர் தேர்வு முறையாக நடைபெற்றது. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு அரியர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதைத் தொடர்ந்து 2021 ஜூலை மாதம்தான் அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன.
பிரத்யேகச் செயலி மூலம் தேர்வுகள் நேரலையில் பல்கலைக்கழகம் மூலம் கண்காணிக்கப்படும். தேர்வின்போது முறைகேட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் 3 முறை எச்சரிக்கை கொடுக்கப்படும். அவற்றை மீறினால், கல்லூரியில் இருந்து நீக்கப்படுவோம் என்று அறிவுறுத்தப்பட்டோம். நாங்களும் அதைப் பின்பற்றித் தேர்வெழுதினோம். அப்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக எந்த எச்சரிக்கையும் செயலி மூலம் செல்பேசிக்கு வரவில்லை.
வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருந்து சுமார் 5,000 பேர் தேர்வெழுதிய நிலையில், 4 மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 2-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், சுமார் 80 சதவீதம் பேர் முறைகேட்டில் ஈடுபட்டதால் தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்டது.
'எங்களால் படிப்பை முடித்துவிட்டுச் செல்ல முடியாது'
இதுகுறித்துக் கல்லூரியிடம் பேசியபோது, முறைகேட்டில் ஈடுபடாதவர்கள் உங்களின் பதிவெண்ணை எங்களின் கொடுத்துச் சரிபாருங்கள் என்று கூறுகின்றனர். எங்களின் பதிவெண்ணைக் கொடுத்தால், நாங்கள் கட்டம் கட்டப்பட்டு அக மதிப்பீட்டில் (Internal), செய்முறைத் தேர்வில் (Practical) கைவைப்பார்கள் என்று அச்சப்படுகிறோம். எங்களால் படிப்பை முடித்துவிட்டுச் செல்ல முடியாது.
இதனாலேயே பல்கலைக்கழக வளாகத்தில் எங்களின் முகக்கவசத்தைக் கழற்றாமல் பேசிக்கொண்டிருக்கிறோம். எந்தக் கல்லூரியில் படிக்கிறோம் என்பதையும் வெளிப்படுத்தாமல் இருக்கிறோம்.
இப்போது மறுமதிப்பீடு செய்யச் சொல்லிக் கேட்கிறோம். ஆனால் அதற்கு ஒவ்வொரு தாளுக்கும் ரூ.1000 கட்ட வேண்டும். 3 ஆண்டுகளாக அரியர் தேர்வு நடத்தப்படாததால் நிறையப் பேருக்கு 10-க்கும் மேற்பட்ட அரியர்கள் உள்ளன. எல்லா மாணவர்களாலும் எப்படி ஆயிரக்கணக்கில் செலவழித்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்?
அதேபோல குறித்த காலத்துக்குள் மறுமதிப்பீட்டுத் தேர்வு முடிவுகள் வெளிவந்ததாகச் சரித்திரமே இல்லை. நான் முதலாமாண்டுத் தேர்வில் பெற்ற அரியருக்கு 2-ம் ஆண்டில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தேன். அதற்கான முடிவுகள் 4-ம் ஆண்டையே நான் முடித்துவிட்டு வந்தபிறகும் இதுவரை வரவில்லை.
செய்முறைத் தேர்வில் எப்படி மோசடி செய்ய முடியும்?
செய்முறைத் தேர்வுகள் அவரவர் படிக்கும் கல்லூரியில் நடத்தப்படவில்லை. மண்டல வாரியாகக் குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டுமே நீண்ட கால இடைவெளிகளில் நடந்தன. அதற்காக, கல்லூரி சென்று அறை எடுத்துத் தாங்கி, செலவு செய்து செய்முறைத் தேர்வை முடித்தோம். தேர்வு முடிவுகளில் செய்முறைத் தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, தேர்ச்சியில்லை என்று அறிவித்துள்ளனர். அத்தனை கண்காணிப்பாளர்கள் மத்தியில் நேரடியாக நடைபெற்ற செய்முறைத் தேர்வில் எப்படி மோசடி செய்ய முடியும்?
இவை அனைத்தையும் குறிப்பிட்டு முதலமைச்சர் தனிப்பிரிவுக்குக் கடிதம் அனுப்பினோம். அன்றே செய்முறைத் தேர்வில் தேர்ச்சி அளிக்கிறோம் என்கிறார்கள். இது எப்படி நடந்தது? எழுத்துத் தேர்வு முடிவுகளின் நிலை என்ன என்று தெரியவில்லை.
தற்போது நாள்தோறும் 3 தேர்வுகள்வீதம் அரியர் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும் என்கிறார்கள். இதை எப்படி மாணவர்களால் மீண்டும் படித்து எழுத முடியும்? இதற்கு மீண்டும் ஒரு தாளுக்கு ரூ.500 வீதம் கட்டணம் செலுத்த டிசம்பர் 8-ம் தேதி கடைசி என்றும் தெரிவித்துள்ளனர். நாங்கள் எந்தத் தவறுமே செய்யாமல், எதற்குப் பணம் கட்ட வேண்டும்?
நாங்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்குங்கள் என்று கூறவில்லை. நாங்கள் எழுதியதைச் சரியாக மதிப்பிட்டு, மதிப்பெண் வழங்கினால் போதும். 80 சதவீதம் பேர் எப்படி ஒரே நேரத்தில் தவறு செய்யமுடியும்? ஒரு வாதத்துக்கு அவர்கள் கூறுவதை உண்மை என்று ஏற்றுக்கொண்டால், முறைகேட்டில் தினமும் ஈடுபடுவதைப் பல்கலைக்கழகம் அப்போது கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்?''
இவ்வாறு அந்த மாணவர் தெரிவித்தார்.
'கல்லூரிக்குச் சென்றாயா வேறு எங்கேனும் சென்றாயா'
தேர்வு முடிவுகள் குறித்து மாணவி ஒருவர் வேதனையுடன் பகிர்ந்துகொண்டார். அவர் கூறும்போது, ''செய்முறைத் தேர்வுக்கு நான் வரவில்லை என்று தேர்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்கள் வீட்டுக்குத் தெரிந்ததும் அம்மா, நீ கல்லூரிக்குச் சென்றாயா வேறு எங்கேனும் சென்றாயா என்று கேட்கிறார். செய்யாத தவற்றுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? பல்கலைக்கழகம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்'' என்று மாணவி தெரிவித்தார்.
இதுகுறித்து விளக்கம் கேட்கக் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத் துணை வேந்தரைத் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை.
ஆச்சரியமான ஒன்றில்லை
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியரிடம் பேசும்போது, ''பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தனியார் கல்லூரிகள் அவற்றுக்குரிய தரத்துடன் இல்லை. கல்லூரி நிர்வாகங்கள் கரோனா காலத்தில் முறையாக ஊதியம் கொடுக்காததால் ஆசிரியர்கள் சரியாக ஆன்லைனில் கற்பிக்கவில்லை. இதனால் மாணவர்கள் சரியாகக் கற்றிருக்க மாட்டார்கள். அதிலும் பல்கலைக்கழகத்தால் தேர்ச்சி அளிக்கப்படாதவை அனைத்தும் அரியர் தேர்வுகளே. ஏற்கெனவே தேர்ச்சி பெறாதவர்கள்தான் அரியர் தேர்வு எழுதுவர் என்ற சூழலில், 80 சதவீதம் பேர் தேர்ச்சி பெறாதது ஆச்சரியமான ஒன்றில்லை. வழக்கமான ஒன்றுதான்'' என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்