நாடு முழுவதும் உள்ள அரசு சைனிக் பள்ளிகளில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளின் முடிவுகளை (All India Sainik Schools Entrance Examination (AISSEE) 2024) தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம்.  


நாடு முழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் சேர ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சைனிக் பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி அன்று 10 முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். காலி இடங்கள் இருப்பதைப் பொறுத்து மாணவிகளுக்கும் இடம் வழங்கப்படும். மாணவிகளுக்கும், அதே வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  


சைனிக் பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி அன்று 13 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும். அதேபோல அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 6ஆம் வகுப்பு சேர்க்கைக்குக் குறிப்பிட்டதைப் போலவே 9ஆம் வகுப்பு மாணவிகள் சேர்க்கை நடத்தப்படும். 


ஆங்கில வழியில் கற்பிக்கும் உறைவிடப் பள்ளிகள்


சைனிக் பள்ளிகள் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற ஆங்கில வழியில் கற்பிக்கும் உறைவிடப் பள்ளிகள் (residential schools) ஆகும். தேசிய ராணுவ அகாடமி, தேசிய கடல் படை மற்றும் பிற பயிற்சி அகாடமிக்களில் சேர சைனிக் பள்ளி மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள்.


ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்வு


2024ஆம் ஆண்டுக்கான AISSEE தேர்வு ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. பேனா - காகித முறையில் நேரடியாக தேர்வு நடைபெற்றது. குறிப்பாக 185 நகரங்களில் 450 தேர்வு மையங்களில் பேனா – காகித முறையில் தேர்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் பல்குறி வகை கேள்விகளுக்கு விடையளித்தனர்.


தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?


* தேர்வர்கள் https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


* அதில் தங்களின் பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளிட்டு தங்களின் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளலாம்.


முழுமையான விவரங்களுக்கு https://exams.nta.ac.in/AISSEE/images/public_notice_result_declaration.pdf என்ற அறிவிக்கையைக் காண வேண்டும்.


சேர்க்கை குறித்த கூடுதல் தகவல்களைக் காண: admission.sss@gov.in என்ற இணைப்பைக் காணவும்.


அண்மையில் நாடு முழுவதும் 23 புதிய சைனிக் பள்ளிகள் பங்களிப்பு முறையில் செயல்பட, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்து இருந்தது. தனியார் தொண்டு நிறுவனங்கள்/ தனியார் பள்ளிகள்/ மாநில அரசுகளுடன் இணைந்து இந்த பள்ளிகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 


கூடுதல் தகவல்களுக்கு: https://aissee.nta.nic.in/