ஏஐசிடிஇ மாணவர் சேர்க்கையில் புதிய விதிமுறைகள் கொண்ட வரைவால் நடுத்தர தனியார் பொறியியல் கல்லூரிகள் கலக்கத்தில் உள்ளன.


அண்மையில் ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், ஒப்புதல் கையேட்டு வரைவை பொதுமக்கள் மத்தியில் வெளியிட்டது. இதில், ’’பொறியியல் படிப்புகளுக்கான, ஒவ்வொரு துறைசார் இடங்களையும் எல்லையில்லாமல் உயர்த்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது துறைசார் பொறியியல் இடங்களுக்கான உச்ச வரம்பு நீக்கப்பட உள்ளது. 2024- 25ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த முறை அமலுக்கு வரும்’’ என்று கூறப்பட்டுள்ளது.


மாணவர் சேர்க்கை இடங்கள்


தற்போது ஒரு கல்லூரியில் ஒரு துறையில் அதிகபட்சமாக 240 இடங்கள் இருக்கலாம். தேவைக்கும் இருப்பதற்கும் இடையில் அதிக இடைவெளி இருப்பதால், இந்த வரம்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையின்படி இந்த வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏஐசிடிஇ வரைவு ஒப்புதல் செயல்முறை கையேட்டில் கூறும்போது, ’’தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கையை மேம்படுத்த, உச்ச வரம்பை நீக்க வேண்டும் என்று கவுன்சில் பரிந்துரை செய்கிறது. எனினும் கட்டமைப்பு வசதி மற்றும் இருக்கும் ஆசிரியர்களின் நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே உச்ச வரம்பு நீக்கப்பட வேண்டும். மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பது குறித்து ஒப்புதல் பெற நிபுணர் குழு ஆய்வு மேற்கொள்ளும்’’ என்று தெரிவித்துள்ளது.


எனினும் முக்கியமான துறைகளில் (core branches) குறைந்தபட்சம் 3 படிப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இடங்களை உயர்த்திக்கொள்ளும் அனுமதி கிடைக்கும். இந்த முன்னெடுப்புக்கு தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.


இதுகுறித்து ராஜலட்சுமி குழும கல்லூரிகளின் துணைத் தலைவர் அபய் மேகநாதன் ஆங்கில ஊடகத்திடம் கூறும்போது, ’’தரமான கல்வியைத் தரும் கல்லூரிகள் தங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி, மாணவர் சேர்க்கையை உயர்த்த இந்த முன்னெடுப்பு உதவும். கல்வியின் தரத்தை அதிகரிக்கவும் இந்த முயற்சி உதவி செய்யும். அமெரிக்காவில் கல்லூரிகளில் சராசரியாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை மாணவர்கள் படிக்கிறார்கள், ஆனால் இந்தியாவில் நிலைமை அப்படியில்லை’’ என்று தெரிவித்தார்.


மாணவர் சேர்க்கை குறையும்


எனினும் நடுத்தர அளவிலான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இதனால் குறையும் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது. எஸ்ஆர்எம் வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி இயக்குநர் சிதம்பரராஜன் கூறும்போது, ’’செயல்முறை பரிந்துரை ஒப்புதல் கையேட்டின் இறுதி வடிவத்துக்காகக் காத்திருக்கிறோம். ஏனெனில் இந்த பரிந்துரை உயர்தர கல்லூரிகளுக்கும் நடுத்தர வகைமையிலான கல்லூரிகளிலும் இடையிலான தூரத்தை மேலும் அதிகரிக்கும். இதனால் மாணவர் சேர்க்கை குறையும். தரமான கல்லூரியை அளிக்கும் திறன் குறையும்’’ என்று தெரிவித்தார். 


தமிழ்நாடு முழுவதும் 440 பொறியியல் கல்லூரிகளில் 2.6 லட்சம் இடங்களுக்கு அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஏஐசிடிஇ வரைவு கையேட்டைக் காண: https://www.aicte-india.org/sites/default/files/Draft_Approval_process_Handbookpdf.pdf#toolbar=0