டிகிரி சான்றிதழில் ஆதார் எண்ணை அச்சிடக் கூடாது என்று நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதுகுறித்து அனைத்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் (ஏஐசிடிஇ) அனுமதி பெற்ற நிறுவனங்களின் முதல்வர்களுக்கும் இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் கூறி உள்ளதாவது:


’’மாநில அரசுகள் சில, மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களிலும் டிகிரி சான்றிதழ்களிலும் முழுமையான ஆதார் எண்ணை அச்சிடத் திட்டமிட்டு உள்ளதாக சில ஊடக நிறுவனங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. மாணவர் சேர்க்கையின்போதோ அல்லது வேலை வாய்ப்பின்போதோ சரிபார்ப்பிற்காக இந்த ஆவணம் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


தகவல் பகிர்தல் தவறு


இது UIDAI ஆதார் நிறுவனத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து UIDAI நிறுவனம்,  அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்குத் தெரிவித்தது. இந்த நிலையில் ஆதார் (தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல்) ஒழுங்குமுறைச் சட்டம் 2016-ன் படி, இது தவறு என்று தெரிவிக்கப்படுகிறது. 


பொது வெளியில் எந்த ஒரு தகவல் தளத்திலும் ஆதார் எண்ணைப் பகிர்வதோ, பதிவு செய்வதோ தவறாகும். தேவைப்பட்டால், சில எண்களை மட்டும் குறிப்பிட்டு, மீத எண்களை அடித்துவிட்டு ஆதார் எண்ணைக் குறிப்பிடலாம். 


ஆதார் எண்ணை அச்சிடக் கூடாது


இதன்படி, ஆதார் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, தற்காலிகச் சான்றிதழ்கள் மற்றும் டிகிரி சான்றிதழ்களில் ஆதார் எண்ணை அச்சிட அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது’’.  


இவ்வாறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது. 


மத்திய அரசின் சார்பில் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் 12 குறியீட்டு எண்களைக் கொண்ட அடையாள அட்டையே ஆதார் அட்டை ஆகும். இந்த அட்டை மத்திய அரசின் நிதியுதவி திட்டங்கள் மற்றும் பான்கார்டு சேவைகள் ஆகியவைப் பெறுவதற்கு பயன்படுகிறது. எனவே இந்த அட்டையில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. 


ஆதார் விவரங்கள்


ஆதார் அட்டையில் ஒருவரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட சில முக்கிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த முக்கியமான தகவல் அனைத்தும் 12 இலக்க எண்ணைக் கொண்டுதான் பதிவிடப்பட்டிருக்கும். அதனால் ஆதார் எண்ணைப் பொது வெளியில் பகிரக் கூடாது என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. எனினும் ஆதார் மூலம் தனி நபர் விவரங்கள், தனியார் நிறுவனங்களுக்குப் பகிரப்படுவதாகத் தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.


இதையும் வாசிக்கலாம்:


TNPSC Chairman: டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு; ஆளுநருக்கு மீண்டும் கோப்புகளை அனுப்பிய தமிழக அரசு