அதிமுக மாணவர் அணியின் சார்பில் திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடத்தப்பட்டது.
அம்மா லேப்டாப்
அதிமுக ஆட்சிக் காலத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2019-ஆம் ஆண்டு வரை 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
மடிக்கணினி திட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது. எனினும் அவை டேப் (TAB) ஆக மேம்படுத்தப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை வழங்கப்படவில்லை. இதற்கிடையே கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் கடைசி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்று அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.
பள்ளி மாணவருக்கும் பாரபட்சமின்றி மடிக்கணினி
இந்த நிலையில், பள்ளி மாணவருக்கும் பாரபட்சமின்றி மடிக்கணினி வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அண்ணா திமுக மாணவர் அணியின் சார்பில் விடியா திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இதுகுறித்து அதிமுக மாணவர் அணி மேலும் கூறும்போது, ’’ஆட்சிக்கு வந்து நான்காண்டு காலமாக எதுவுமே பண்ணாமல் , கடைசி நேரத்தில் தேர்தலுக்காக கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் 10 லட்சம் மடிக்கணினி வழங்கப்படுமென முதல்வர் ஸ்டாலின் அரசு அவசரமாக அறிவித்திருக்கிறது.
அரசுப்பள்ளி மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றிய ஈபிஎஸ்
விலையில்லா மடிக்கணினி என்ற மகத்தான திட்டத்தின் மூலம், அரசுப்பள்ளி மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாற்றி அமைத்தார்’’ என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அம்மா லேப்டாப் திட்டத்தால் Elevate ஆன இளைஞர்களை அதிமுக எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, கலந்துரையாடினார். இதுதொடர்பான புகைப்படங்களை அதிமுக வெளியிட்டுள்ளது.