பயனர் எதைக் கேட்டாலும் செய்து தரும் மெய்நிகர் அமுத சுரபி சாட் ஜிபிடியால், யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. எப்படி? பார்க்கலாம்.
ChatGPT
ChatGPT தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறி பல காலம் ஆகிவிட்டது. தினந்தோறும் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரம், நிதி, சில்லறை வணிகம் மற்றும் போக்குவரத்து போன்ற தொழில்களில் வழக்கமான பணிகளை தானியக்கமாக்குவதற்கும், முடிவெடுப்பதை மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் தேடுபொறி துறையில் முன்னணியில் உள்ள கூகுளுக்கு சவால் விடும் வகையில், Open AI எனும் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் சாட்ஜிபிடி எனும் சாட்பாட் தொழில்நுட்பத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்திற்கும் ChatGPT பதிலளிக்கிறது. உதாரணத்துக்கு அது நமக்கு ஒரு கவிதை கேட்டால் எழுதித் தரும். நம்மிடம் ஒரு புதிர் கேட்கச் சொன்னால் கேட்கும். கட்டுரை, பாடல், பதிவுகள் என பல விஷயங்களை உள்ளடக்கியது சாட் ஜிபிடி என்பது நாம் அறிந்ததுதான்.
54 கேள்விகளுக்கு மட்டுமே சரியான பதில்
எனினும் நாட்டிலேயே மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றான யூபிஎஸ்சி தேர்வை சாட்ஜிபிடி எவ்வாறு அணுகும் என்று அனலிட்டிக்ஸ் இந்தியா மாகசின் சோதனை செய்தது. இதில் 2022 யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கான வினாத் தாள் 1-ல் 100 கேள்விகளுக்கு 54 கேள்விகளுக்கு மட்டுமே சரியான பதில் அளிக்க முடிந்தது. புவியியல், பொருளாதாரம், வரலாறு, அறிவியல், சூழலியல், அறிவியல், அரசியல் அறிவியல், நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட கேள்விகள் அதில் இடம்பெற்று இருந்தன.
ஃபெயில் ஆன சாட் ஜிபிடி
இதன்மூலம் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு நிர்ணயிக்கபட்ட 87.54 சதவீத கட் - ஆஃப் மதிப்பெண்களை AI சாட்பாட்டால் பெற முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. சில கேள்விகளுக்கு சொந்தமாகவே ஒரு பதிலை சாட் ஜிபிடி தருகிறது. குறிப்பாக 4 விடைகள் மட்டுமே வழக்கமாக அளிக்கப்படும் சூழலில், "ஆப்ஷன் E" என்ற பதிலை சாட் ஜிபிடி தேர்வு செய்தது. நடப்பு நிகழ்வுகள் தாண்டி, பொருளாதாரம், புவியியல் சார்ந்த கேள்விகளுக்கும் சாட் ஜிபிடி தவறாக பதில் அளித்தது.
யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவது குறித்து சாட் ஜிபிடியிடமே கேட்கும்போது, அதனால் உறுதியான பதிலைக் கூற முடியவில்லை. ''நான் செயற்கை நுண்ணறிவு மொழி மாடல் என்பதால், யூபிஎஸ்சி தேர்வு மற்றும் அதுசார்ந்த தகவல்கள் தொடர்பான அறிவு மற்றும் தகவல் சார்ந்து ஏராளமான புலமை உள்ளது.
எனினும் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற அறிவு மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. எனினும் சிந்தனைத் திறன், பயன்பாட்டுத் திறன், நேர மேலாண்மைத் திறன் உள்ளிட்ட பல அம்சங்கள் தேவை. அதனால் என்னால் தேர்ச்சி பெற முடியுமா இல்லையா என்பது குறித்து உறுதியான பதிலை என்னால் அளிக்க முடியாது'' என்று சாட் ஜிபிடி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாட் ஜிபிடியால் ரூ.91 லட்சம் லாபம்
முன்னதாக தனியார் நிறுவனத்திடம் இருந்து கிடைக்க வேண்டிய சுமார் ரூ.91 லட்ச ரூபாயை, ஒரே மெயில் மூலம் பெற சாட்ஜிபிடி தொழில்நுட்பம் உதவியதாக ஒருவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்காக வழக்கறிஞரை வைத்து வழக்கு தொடர்ந்து இருந்தால் தனக்கு பெரும் தொகை செலவு ஆகியிருக்கும் எனவும் அந்த நபர் குறிப்பிட்டது லைக்குகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.