நடிகர் சூர்யா அரசுப்பள்ளிகளில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழு குறித்து பேசியுள்ளார்.


இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், “ சிறந்த பள்ளிகள்தான் சிறந்த மனிதர்களை உருவாக்க முடியும். பள்ளிக்கூடம் சாதாரண கட்டடம் இல்லை. அங்கு நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். அதில் பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள் ஆவர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் பொறுப்புமிக்க கல்வியாளர்கள் ஆகிய மூன்று தரப்பும் ஒன்றாக சேர்ந்தால் சிறந்த பள்ளிகளை உருவாக்க முடியும். மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை தரமுடியும்.


நமது கடமை


மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கல்விச்சூழலை உருவாக்கித் தரவேண்டியது நமது கடமை. அரசுப்பள்ளிகளில் மேலாண்மை குழுவை மறுகட்டமைப்பு செய்கிறது தமிழக அரசு. இந்தக்குழுவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் இந்தக் குழுவில் இருக்கப் போகிறார்கள். இதன்மூலம் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எடுக்கப்பட இருக்கிறது. பள்ளியை சுற்றியுள்ள எல்லா தரப்பினரையும் படிக்கவைப்பதும், படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை படிக்க வைப்பதும் இந்தக்குழுவின் முக்கிய வேலைகளாக இருக்கிறது.






சிறப்பு கவனம்


மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்பு கவனம் தேவைப்படுகிற மாணவர்கள் உள்ளிட்டோருக்கு தேவைப்படுகிற சூழலும், வசதியும் உள்ளதா என்பதையும் இந்தக்குழு உறுதி செய்யும். பள்ளிக்கூடத்திற்கான கட்டிட வசதி, மதிய உணவுத்திட்டம், மாணவர்களுக்கு அரசு தருகின்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை சரியாக வந்து சேருகின்றதா? என்பதையும் இந்தக்குழு கவனித்துக்கொள்ளும்.


நமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி சூழலும் வசதியும் கிடைக்க வேண்டுமென்றால் எல்லா அரசுப் பள்ளிகளில் நடக்கவிருக்கும் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நிகழ்வில் கலந்துகொள்வது மிக அவசியம். சிறந்த கல்வியும், சிறந்த பள்ளியும் மாணவர்களின் உரிமை. அதற்கு துணை நிற்பதும் அதற்கு உதவி செய்வதும் நம் கடமை” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண