சமூகத்தில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் சாதி மதத்தை கடந்தது கல்வி மட்டுமே என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
சென்னை சாலி கிராமத்தில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் நடிகர் சூர்யா, அவரது தம்பியான கார்த்தி மற்றும் தந்தை சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அகரம் மூலம் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டிய சூர்யா, அகரத்தின் இளம் தலைமுறையினரை பாராட்டினார். கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசுடன் இணைந்து அகரம் செயல்படுவதால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி வழங்க முடிவதாக தெரிவித்தார். அகரம் மூலம் படித்து சமூகத்தில் பணிக்கு செல்லும் மாணவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் அதிகளவில் தன்னம்பிக்கை இருப்பதாக கூறிய சூர்யா, அகரம் மாணவர்களையே சில கல்லூரிகள் விரும்புவதாக குறிப்பிட்டார்.
40 வயதில்தான் தனக்கு பெண்கள் மீதான புரிதல் ஏற்பட்டுள்ளது என்ற சூர்யா, அகரம் அறக்கட்டளையில் படித்து வெளியேறும் இளம் தலைமுறையினருக்கு பெண்களை உணர்ந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் அளவுக்கு புரிதல் இருப்பதாக கூறி நெகிழ்ந்தார். தொடர்ந்து பேசிய சூர்யா, “கல்வி மூலமாக மட்டுமே வீட்டையும், சமுதாயத்தையும் மாற்ற முடியும். கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள். வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள். சமூகத்தில் ஏராளமான ஏற்ற தாழ்வுகள் உள்ளன. சாதி, மதத்தை கடந்தது கல்வி மட்டுமே. தொழிலுக்கும், வாழ்க்கைக்கும் கற்று தருவதே கல்விதான். மார்க் மட்டுமே வாழ்க்கை இல்லை. இளம் தலைமுறையை சரியான பாதையில் வழிநடத்துவதால் அரசுப்பள்ளி ஆசிரியர்களை தலை வணங்குகிறேன்” என்றார்
இறுதியாக, “யாரோ ஒருத்தர் வீண் சொல்லோ அல்லது பழி சொல்லோ பேசிவிட்டால் அதற்காக முழு நாளை வீணாக்க முடியாது. அதேபோல்தான், ஒரு நாளையின் தொடக்கம் நல்ல காரியங்களில் இருந்து தொடங்க வேண்டும். நெகட்டிங் எண்ணங்களை விட்டு வாழ்வின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
2006ம் ஆண்டு சூர்யா தொடங்கிய அகரம் அறக்கட்டளை ஆண்டு தோறும் ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பள்ளி படிப்பை தருவதுடன், மருத்துவர், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் வரை படிக்க வைத்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்று தருகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சியத்தில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்காக பாராட்டு விழா நடைபெறும். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், வெற்றிப்பெற்ற மாணவர்களை பாராட்டி சூர்யா சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக, விழாவில் பேசிய கார்த்தி, கல்வி இருந்தால் போதும் ஒரு தலைமுறையே முன்னேறும் என்றதுடன், அதற்கு உதாரணம் அகரம் அறக்கட்டளையில் சாதித்து காட்டிய மாணவ, மாணவிகள் தான் என்றார்.