1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.27) அறிவித்துள்ளார். ஒமிக்ரான் தொற்று கணிசமாக ஏற்பட்டு வரும் நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு என்பது அவசியமானதா, ஆபத்தானதா என்று கேள்வி எழுந்துள்ளது.


முன்னதாக கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்த சூழலில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில், வகுப்புகள் தொடங்கப்பட்டன. நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட்டு இயங்கி வந்தன. கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததை அடுத்து, பள்ளிகள் 8ஆம் வகுப்பு வரை மூடப்பட்டு, பின்பு 12ஆம் வகுப்பு வரையிலும் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டன. 


தமிழ்நாடு மட்டுமல்லாது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தமிழ்நாட்டில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக இன்று (ஜன.27) அறிவிப்பு வெளியாகியுள்ளது. 




அதன்படி, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிப்.1 முதல் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று கணிசமாக ஏற்பட்டு வரும் நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு என்பது பாதுகாப்பானதா என்று கேள்வி எழுந்துள்ளது.
 
இதுகுறித்துத் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் குகானந்தம் 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்திடம் பேசினார். 


''பள்ளிகள் திறக்கப்பட வேண்டியது சரியான முடிவுதான். இதற்கு மிகவும் முக்கியமான 3 காரணங்கள் உள்ளன. முதலாவதாக, குடிசைப் பகுதி, கீழ் நடுத்தர வர்க்க மாணவர்கள் ஆண்டுக்கணக்கில் ஆன்லைன் வகுப்பில் இணைந்து படிக்கப் போதிய வசதியில்லை. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. விளிம்புநிலை மக்களுக்குப் படிப்புதான் முக்கிய ஆதாரம். 


இரண்டாவதாக, கொரோனா இரண்டாவது அலையில் டெல்டா வைரஸ் காரணமாக நிறையப் பேர் உயிரிழந்தனர். பின்பு தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது ஒமிக்ரான் திரிபு வேகமாகப் பரவி வருகிறது. எனினும் இது சாதாரண ஃப்ளூ காய்ச்சல் போலவே பரவுகிறது. ஆண்டுதோறும் வரும் சாதாரணக் காய்ச்சல் போல மாறிவிட்டது. இன்று ஒமிக்ரான் தொற்றால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. உலகம் முழுவதும் 0.2 சதவீதத்துக்கும் கீழாகவே இந்த எண்ணிக்கை உள்ளது. 




இது சாதாரணக் காய்ச்சலில் தொடங்கி, உடல் வலி, தொண்டை வலியோடு 2, 3 நாட்களில் சரியாகி விடுகிறது. இது இளைஞர்களை, குழந்தைகளை அதிகம் பாதிப்பதில்லை. 


3-வதாக மக்கள் மத்தியில் 75- 80% பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளப்பட்டதால், சமூக நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது. இதனால் ஒமிக்ரானின் தாக்கமும் தீவிரமும் பிப்ரவரி கடைசிக்குள்ளாக முழுமையாகக் குறையும்.


மேற்குறிப்பிட்ட காரணங்களால் தாராளமாகப் பள்ளிகளைத் திறந்து வகுப்புகளை நடத்தலாம். 


வயதானோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்


எனினும் வயதானவர்களும், ரத்த அழுத்தம், சர்க்கரை, டயாலிசிஸ் உள்ளிட்ட இணை நோய் கொண்டவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செய்து, பரிசோதித்துத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே எல்லோரும் குறிப்பிட்ட முகக் கவசம், தனிமனித இடைவெளி, தடுப்பூசி போடுதல், அடிக்கடி கைகழுவுதல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும். 


 



மருத்துவர் குகானந்தம்


பள்ளிகள் எவ்வாறு செயல்பட வேண்டும்?


* பள்ளிகளில் முடிந்த அளவு இடைவெளி பேணப்பட வேண்டும். 
* முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். 
* வகுப்பறைகள் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். இதற்காக வகுப்பறைக் கதவுகள், ஜன்னல்கள் திறந்தே இருக்கப்பட வேண்டும்.
* வகுப்புகளில் ஏசி வசதிகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். 
* பள்ளிகளில் தண்ணீர் வசதி தொடர்ச்சியாகக் கிடைக்கப்பட வேண்டும். 
* கைகழுவ சோப்புகள் வைக்கப்பட வேண்டும். 
* ஆசிரியர்களும், பணியாளர்களும் 100% தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 
* அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.


அதையும் மீறித் தொற்று ஏற்பட்டால்...


கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறி மாணவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால், பெற்றோர்கள் கைவைத்தியம் பார்த்து, மருந்துகள் கொடுக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சாதாரணமாகக் காய்ச்சல் வந்தால் என்ன செய்வோமோ, அதைச் செய்தால் போதும். 



பள்ளிகள் திறக்கப்படக்கூடாது, அவற்றால் நோய் பரவும் என்று கூறுவது சற்றும் நியாயமற்ற செயல். அது அறிவியல்பூர்வமாக உண்மையும் கிடையாது'' என்று தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் குகானந்தம் தெரிவித்தார்.


டெல்லியில் தொற்று குறைந்துவரும் நேரத்தில், அங்கு வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என்றே இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐசிஎம்ஆர் பொது சுகாதார நிபுணரான பிரதீப் கவுர், ''பள்ளிகளில் குழந்தைகளை அனுமதிக்க அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குழந்தைகள் ஏற்கெனவே வீட்டிலும் பெற்றோர்களுடன் வெளியில் செல்லும்போதும் தொற்று அபாயத்துக்கு உள்ளாகின்றனர். அதனால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் முன்னால், வீட்டு உறுப்பினர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்தால் போதும்'' என்று தெரிவித்துள்ளார்.


பள்ளிகள் திறப்பு அவசியமான ஒன்றுதான். எனினும் ஆயிரக்கணக்கில் குழந்தைகள் கூடும் இடத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் சரியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டியது உறுதிசெய்யப்பட வேண்டும்.