இந்த ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், தேர்வு கைவிடப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வாக மாற்றப்பட்டுள்ளதா என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம், சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு அதிக அளவில் தயாராகி, பங்கு பெறும் நிலையில், அதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு தெரிவித்தது.
யாரெல்லாம் எழுதலாம்?
இத்தேர்வில் 50 சதவீத அளவுக்கு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் (CBSE / ICSE உட்பட) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர். தமிழ்நாடு அரசின் 10-ஆம் வகுப்புத் தர நிலையில் உள்ள தமிழ் பாடத் திட்டங்களின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வு கொள்குறி வகையில் அமைந்திருக்கும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதன்முதலாக 2022- 2023ஆம் கல்வியாண்டில் அக்டோபர் 15ஆம் தேதி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டது. 2.67 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில், 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வெளியாகாத அறிவிப்பு
இந்த நிலையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வை இந்த ஆண்டு நடத்துவதற்கான அறிவிப்பு இன்று வரை வெளியிடப்படவில்லை. எனினும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு என்ற தேர்வு புதிதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழ் இல்லாத பிற பாடங்களுக்கான திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 23-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதனால், தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்படாமல் கைவிடப்படுகிறதா? என்று கல்வியாளர்களும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கான அறிவிப்பு, நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தும் வெளியிடப்படாதது ஏன்? என்பது தான் என்னைப் போன்ற தமிழார்வலர்களின் வினா ஆகும். தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு என்பது மிகவும் அற்புதமான முயற்சி ஆகும். அதன் மூலம் மாணவர்களின் தமிழார்வம் ஊக்குவிக்கப்பட்டது. 1500 மாணவர்களுக்கு இரு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட ரூ.36,000 பரிசுத் தொகை அவர்களின் உயர்கல்விக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இந்தத் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டால் மாணவர்களிடம் தமிழ் மீதான ஆர்வமும், பற்றும் அதிகரிக்கும்.
எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்பது தான் தமிழக அரசின் முழக்கமாக உள்ளது. தமிழ் மொழியை வளர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் அரசு, தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வை தொடர்ந்து நடத்தாமல், ஒரே ஆண்டுடன் மூடுவிழா நடத்தினால், அது தமிழ் மொழிக்கு ஆதரவாக இருக்காது.
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தேர்வுகள் துறை உடனடியாக வெளியிட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். அதேபோல தஞ்சாவூர் தமிழகத் தமிழ் ஆசிரியர் கழகமும், தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.