திருவாரூர் மாவட்டத்தில் பெரிய வசதிகள் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் மாணவர் ஹரிகரன்.  அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் கலைச்செல்வி தம்பதியினரின் மகன் ஹரிஹரன். ஹரிகரனின் தந்தை சிவக்குமார் விவசாயம் செய்து வருகிறார். அவரது தாய் இல்லத்தரசி.  கடந்த 2022-23ஆம் கல்வியாண்டில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று 600 க்கு 533 மதிப்பெண் எடுத்துள்ளார் ஹரிகரன்.  மிகவும் பின்தங்கிய தனது கிராமத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தினால் மக்கள் படும் சிரமத்தை கண்கூடாக தன்னுடைய சிறுவயதில் இருந்து பார்த்து வந்த ஹரிகரன் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார்.  


மனம் தளராத விவசாயி மகன் – மீண்டும் எழுதினார் நீட் தேர்வு


இந்த நிலையில் 12 ஆம் வகுப்பை முடித்தவுடன் அவர் நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதியுள்ளார். அதில் 145 மதிப்பெண்கள் எடுத்து அவர் வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராத ஹரிஹரன் மீண்டும் நீட் தேர்வை எழுத வேண்டும் என முடிவு செய்துள்ளார். மகனின் ஆசையை புரிந்து கொண்ட விவசாயியான தந்தை சிவக்குமார் கடன் வாங்கி தனது மகனை நாமக்கலில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். அங்கு மூன்று மாதங்கள் ஹரிஹரன் தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதுவதற்கு கடுமையான பயிற்சி பெற்றுள்ளார்.


ஆங்கில வழியில் நீட் தேர்வு எழுத முடிவு – வெற்றியை முத்தமிட்ட ஹரிகரன்


இதனையடுத்து ஒன்றாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த ஹரிஹரன் நீட் தேர்வை ஆங்கில வழியில் எதிர்கொள்வது என்று முடிவெடுத்து தனது பயிற்சியார்களிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் ஆங்கில வழியில் நீட் தேர்வு எழுதுவதற்கு தன்னை தயார் செய்து கொண்டு தீவிரமாக முயற்சி செய்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வை ஹரிகரன் ஆங்கில வழியிலேயே எதிர்கொண்டுள்ளார். அதில் அவர் 720க்கு 494 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். இதன் காரணமாக தற்போது அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனக்கு மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்குமென அவர் உறுதியாக நம்பி காத்துக்கொண்டிருக்கிறார்.


 


ஹரிகரன் சொல்வது என்ன ?


இது குறித்து மாணவன் ஹரிஹரன் கூறும் போது : சிறுவயதில் இருந்து தனக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்ததால் கண்டிப்பாக இரண்டாவது முறையில் வெற்றி பெற்று விடலாம் என்கிற நம்பிக்கையில் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றதாகவும் 145 லிருந்து 494 மதிப்பெண் எடுத்துள்ளதை பெரிய மாற்றமாக நான் கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். எனது கிராமத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாததால் நான் கண்டிப்பாக மருத்துவராக வேண்டும் என்று முடிவெடுத்து தற்போது நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகவும் என்னை போன்றே அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளும் தன்னம்பிக்கை இருந்தால் கண்டிப்பாக நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.


கப்பலுடையான் என்ற சிறு கிராமம்


கொரடாச்சேரி அருகில் உள்ள குக் கிராமமான கப்பலுடையான் கிராமத்தில் பிறந்து ஏழை எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து விடாமுயற்சியுடன் படித்து, ஒரு முறை குறைந்த மதிப்பெண் எடுத்த பிறகும் மனம் தளராமல், தன்னம்பிக்கையோடு நீட் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ள மாணவன் ஹரிஹரனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.


மேலும் மாணவன் நீட் தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்து அவனது வீடு தேடி வந்து பாராட்டிய அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் சக்திவேல் உனது வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது எனக் கூறி நெகிழ்ச்சியுடன் மாணவனுக்கு தனது பாராட்டை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


விவசாயி தந்தைக்கு பாராட்டு


ஹரிகரனின் தந்தை சிவகுமார் ஒரு விவசாயியாக இருந்தாலும் ஒரு முறை குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்ட மகனை அத்தோடு நிறுத்தி வேறு படிப்புக்கு விண்ணப்பிக்க சொல்லாமல், தொடர் ஊக்கம் கொடுத்து, அவரை மருத்துவராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கி, ஹரிகரனை தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்து ஆதரவளித்துள்ளார். பிள்ளைகளின் கனவை தங்களுடைய கனவாக எண்ணுகிற பெற்றோர்களுக்கு ஹரிகரனின் தந்தை சிவக்குமார் ஓர் எடுத்துக்காட்டு.