தற்போதைய மாணவ தலைமுறை தடம் மாறிச் செல்வதாகவும் அவர்களுக்கு வாரம்‌ ஒரு முறை என குறைந்தது மூன்று ஆண்டுகளுக்காவது மனநல ஆலோசகர்கள்‌, காவல்துறை அதிகாரிகள்‌ மற்றும்‌ தன்னார்வலர்களைக் கொண்டு அறிவுரையும்‌ ஆலோசனையும்‌ வழங்க வேண்டும் எனவும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள்‌ சங்கம்‌ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடிதத்தை பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள்‌ சங்கம்‌ அனுப்பி உள்ளது.


இதுகுறித்து அதன் மாநிலத் தலைவர் கெளதமன் கூறி உள்ளதாவது:


’’அரசுப்‌ பள்ளிகளில்‌ படித்து வரும்‌ லட்சக்கணக்கான மாணவர்களின்‌ நலன்‌சார்ந்து இந்த கோரிக்கையை உங்களிடம்‌ சமர்ப்பிக்கிறோம்‌. சமீப காலங்களில்‌ மாணவர்கள்‌ பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்‌. புகையிலை, போதை போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனர்‌. இதனால்‌ அவர்களின்‌ உடல்நலன்‌ பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல்‌ கற்றல்‌ திறனும்‌ பாதிக்கப்பட்டு அவர்களது எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது.


இது மட்டுமல்லாமல்‌ சமூக ஊடகங்கள்‌, திரைப்படங்களின்‌ தாக்கங்களால்‌ பிஞ்சுப்‌ பருவத்திலேயே காதல்‌ வயப்படுவதும்‌. காதல்‌ தோல்வி என மாணவிகள்‌ ஆறாம்‌ வகுப்பு முதலே தன்னைத்‌ தானே காயப்படுத்திக்‌ கொள்வதும் நடக்கிறது. சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும்‌ பாலியல்‌ ரீதியான உறவுகளும்‌ கூட மாணவ மாணவிகளிடம்‌ ஏற்படுகிறது.


கல்வி அறிவு கட்டாயம்


கலாச்சாரம்‌, பண்பாடு‌ என்பதை எல்லாம்‌ தாண்டி மாணவர்களுக்கு கல்வி அறிவு கட்டாயம்.‌ ஆனால்‌ மேற்கண்ட செயல்களால்‌ அவர்களது கல்வி ஆர்வம்‌ குறைந்து, அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்வார்களோ என்ற அச்சம்‌ ஏற்படுகிறது.


கொரோனா கால விடுமுறை மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலைப்‌ பொருட்கள்‌ கூட ஏதோ ஒரு வகையில்‌ மாணவர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. பள்ளி ஆசிரியர்கள்‌ கண்காணிது கட்டுப்படுத்தினாலும்‌ பளளிக்கு வெளியே அவர்கள்‌ அந்தப்‌ பழக்கத்தை தொடரவே செய்கிறார்கள்‌.


எனவே மாணவர்களின்‌ நலனைக் கருத்தில்‌ கொண்டு, எதிர்கால இளைய தலைமுறை சீரழிந்து விடக்கூடாது என்பதனால்‌ அவர்களுக்கு வாரம்‌ ஒரு முறை என குறைந்தது மூன்று ஆண்டுகளுக்காவது மனநல ஆலோசகர்கள்‌, காவல்துறை அதிகாரிகள்‌ மற்றும்‌ தன்னார்வலர்களைக் கொண்டு மாணவர்களுக்கு அறிவுரையும்‌ ஆலோசனையும்‌ வழங்க வேண்டும்’’.


இவ்வாறு ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள்‌ சங்கம்‌ தெரிவித்துள்ளது. 


கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை


கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. 


இவை தவிர்த்து சமூக ஊடகங்கள், கட்டற்ற இணைய சுதந்திரம் ஆகியவற்றாலும் மாணவ சமுதாயத்தினர் பாதிக்கப்பட்டு வருவதாக குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், ஆசிரியர்கள் சங்கம் இத்தகைய கோரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.