தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்வுக் கூட அனுமதிச்சீட்டுகளை இணையதளம் மூலம் ஜூலை 31ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று தெரிவித்து உள்ளதாவது:
தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு 07.08.2023 முதல் 11.08.2023 வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுத தேர்வுத் துறையின் சேவை மையங்களில் (Service Centre) ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 31.07.2023 (திங்கள் கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in
என்ற இணைய தளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யும் முறை
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் HALL TICKET என்ற வாசகத்தை க்ளிக் செய்தால், "ESLC AUGUST 2023 EXAMINATION - CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற தலைப்பு வரும். அதில் உள்ள "DOWNLOAD HALL TICKET" என்ற வாசகத்தினை பேரே செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) பிறந்த தேதி (Date of birth) ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தனி அறிவிப்பு எதுவும் கிடையாது
மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு எதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு அட்டவணை இதுதான்:
தேதி | கிழமை | நேரம் | பாடம் |
07.08.2023 | திங்கட்கிழமை | காலை 10 மணி முதல் 12 மணி வரை | தமிழ் |
08.08.2023 | செவ்வாய்க்கிழமை | காலை 10 மணி முதல் 12 மணி வரை | ஆங்கிலம் |
09.08.2023 | புதன் கிழமை | காலை 10 மணி முதல் 12 மணி வரை | கணிதம் |
10.08.2023 | வியாழக்கிழமை | காலை 10 மணி முதல் 12 மணி வரை | அறிவியல் |
11.08.2023 | வெள்ளிக்கிழமை | காலை 10 மணி முதல் 12 மணி வரை | சமூக அறிவியல் |
முன்னதாக இந்தத் தேர்வுக்கு, 01.08.2023 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் ஜூன் 20 முதல் 28ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த பின், தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70/- என மொத்தம் ரூ.195/-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்தினர்.
இந்நிலையில் தேர்வுக் கூட அனுமதிச்சீட்டுகளை இணையதளம் மூலம் ஜூலை 31ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.