மாணவர்களே… பொதுத் தேர்வுகளில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற நீங்கள் நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டியதில்லை.

Continues below advertisement


உங்கள் படிப்பின் தரம், கவனம் மற்றும் சரியான நுட்பங்கள் ஆகியவற்றைக் கொண்டு மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாகக் கற்றுக்கொள்கிறார்கள், ஆனால் தன் சொந்த முறையை செம்மைப்படுத்தி சில உத்திகள் மூலம், பள்ளி, கல்லூரி இளங்கலை அல்லது முதுகலைத் தேர்வுகளில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்களை எளிதாகப் பெறலாம்.


அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? இதோ சில பயனுள்ள வழிமுறைகள்!



  1. நேரத்தை விட தரம் முக்கியம்:


உட்கார்ந்துகொண்டே 10 மணிநேரம் போதிய கவனம் செலுத்தாமல் படிப்பதற்கு பதிலாக, முழு கவனத்தோடு 3 மணிநேரம் படித்தால்கூடப் போதும். அதேபோல மணி நேரங்களை நாள் முழுவதும் பிரித்துப் படிப்பது, சோர்வைக் குறைத்து, கவனத்தை மேம்படுத்துகிறது.



  1. மனப்பாடம் செய்யாமல் புரிந்துகொள்ளுங்கள்:



ஒரு கருத்தை மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக அதை எப்போதும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். "இது ஏன் இப்படி செயல்படுகிறது? எதனால் ஏற்படுகிறது" போன்ற கேள்விகளை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் - இது அறிவை நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ளவும். தகவலை மறக்காமல், தேர்வுகளில் சிறப்பாகப் பயன்படுத்தவும் உதவும்.



  1. மீண்டும் மீண்டும் சரிபாருங்கள்:


படித்த அனைத்தையும் கடைசி நாளில் சரிபார்த்து ரிவைஸ் செய்துகொள்ளலாம் என்று விட்டுவிடாதீர்கள். அதற்குப் பதிலாக, கடினமான தலைப்புகளை தினமும் மீள் வாசிப்பு செய்யுங்கள், மற்றவற்றை குறிப்பிட்ட இடைவெளிகளில் மீண்டும் ரிவைஸ் செய்யுங்கள். ஸ்பேஸ்டு ரிபெடிஷன் (Spaced Repetition) என்னும் நுட்பத்தைப் பின்பற்றுங்கள். அதாவது நாளை, இரண்டு நாட்களுக்குப் பிறகு, மூன்று நாட்களுக்குப் பிறகு என ரிவைஸ் செய்யலாம்.



  1. மற்றவர்களுக்கு கற்பிக்கலாம்



ஒரு கருத்தை/ பாடத்தை மற்றவர்களுக்கு விளக்க முடிந்தால், நீங்கள் அதில் மாஸ்டர் ஆகிவிட்டீர்கள் என்று அர்த்தம். மற்றவர்களுக்குக் கற்பிப்பது உங்கள் புரிதலை ஆழமாக்கும். நீங்கள் வேகமாக கற்றுக்கொள்ளவும் மறக்காமல் இருக்கவும் உதவும்.



  1. போதிய ஓய்வு அவசியம்


தெளிவான மற்றும் சுறுசுறுப்பான மனதிற்கு போதிய ஓய்வு அவசியம். குறைந்தது எட்டு மணிநேரம் தூங்குங்கள், நடப்பது அல்லது ஸ்ட்ரெச்சிங் போன்ற லேசான உடல் பயிற்சிகளை செய்யுங்கள். உங்கள் உடலையும் மனதையும் படிப்புக்குத் தயாராக வைத்திருக்க சமச்சீர் உணவை உண்ணுங்கள்.



  1. முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்


தேர்வு முறைகள் மற்றும் கேள்வி கடினத்தன்மையைப் புரிந்துகொள்ள முந்தைய ஆண்டு வினாத்தாள்களுடன் பயிற்சி செய்யுங்கள். இது இந்த ஆண்டுக்கான தேர்வை இன்னும் எளிதாக்கும்.



  1. போன் பயன்பாடு


இது மிகவும் முக்கியமான பாயிண்ட். படிக்கும்போது உங்கள் செல்பேசியை ஒதுக்கி வையுங்கள் அல்லது கவனத்தை சிதறடிக்கும் பயன்பாடுகளுக்கு நோ சொல்லுங்கள். ஒரு மணி நேரம் கவனச்சிதறல் இல்லாத படிப்பு, மூன்று மணிநேரம் கவனச்சிதறல் உள்ள முயற்சிக்கு சமம். இது பிற வேலைகளுக்கும் பொருந்தும்.



  1. பிரபலமான பொமோடோரோ நுட்பம்
    பொமோடோரோ நுட்பம் என்பது, 25 நிமிட படிப்பு அமர்வுகளை 5 நிமிட சிறு இடைவெளிகளுடன் செயல்பட்டு, கவனத்தை அதிகரிக்கிறது மற்றும் சோர்வைத் தடுக்கிறது. நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு இது சரியானது.


இறுதியாக…


தேர்வுகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, தினமும் 5- 6 மணிநேரம் கவனம் செலுத்திப் படியுங்கள். அமைதியாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள். 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற நீங்கள் நாள் முழுவதும் படிக்கத் தேவையில்லை, சரியான வழியில் படித்தால் போதும்.