தமிழ்நாடு முழுவதும் மாவட்டக் கல்வி அலுவலர்‌கள் 57 பேரைக் கூண்டோடு பணியிட மாற்றம் செய்து, பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களுக்கும் 38 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல ஒவ்வொரு மாவட்டங்களும் 2 – 3 கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்று பணியாற்றி வருகின்றனர்.


தொடக்கக் கல்வி, இடைநிலை வாரியாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களில் 57 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்து உள்ளதாவது:


நிர்வாக நலன்‌ கருதி மாறுதல்‌


''தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணி விதிகளில்‌ வகை 14/-ன்கீழ்‌ வரும்‌ மாவட்டக் கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ பணிபுரிந்து வரும்‌ அலுவலர்களுக்கு நிர்வாக நலன்‌ கருதி மாறுதல்‌ வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.


மாறுதல்‌ அளிக்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள்‌, முதன்மைக்கல்வி அலுவலர்களால்‌ நியமனம்‌ செய்யப்படும்‌ பொறுப்பு அலுவலர்களிடம்‌ தமது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில்‌ சேர வேண்டும்.


தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்கள்‌ தமது மாவட்டத்தில்‌ மாறுதல்‌ அளிக்கப்பட்டுள்ள மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கு பதிலாக மாவட்டத்தில்‌ உள்ள அரசு உயர்‌ / மேல்நிலைப் பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களில்‌ இருந்து பணியில்‌ மூத்த ஒருவரை பொறுப்பு அலுவலராக நியமனம்‌ செய்து ஆணை வழங்கிவிட்டு, உரிய பின்னேற்பின்‌ பொருட்டு கருத்துருக்களை பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கும்‌படியும்‌ கேட்டுக்‌கொள்ளப்‌படுகிறார்கள்‌.


எவ்வித தாமதமும்‌ ஏற்படக்கூடாது


மாவட்டக்‌ கல்வி பொறுப்பு அலுவலர்கள்‌ நியமனம்‌ சார்ந்து எவ்வித தாமதமும்‌ ஏற்படக்கூடாது எனவும்‌ சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது''.


பணி விடுவிப்பு / பணியில்‌ சேர்ந்த அறிக்கை மற்றும்‌ பொறுப்பு ஒப்படைப்பு சான்றிதழ்‌ (CTC) உடனடியாக மறு நினைவூட்டுக்கு இடமின்றி பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கும்‌ தொடர்புடைய இயக்ககம்‌ / முதன்மைக் கல்வி அலுவலர்‌ / மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்‌ எனவும்‌ பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 விடுப்பில் செல்லும் பள்ளிக் கல்வி இயக்குநர்


பள்ளிக் கல்வி இயக்குநராகப்‌ பணிபுரியும்‌ முனைவர்‌ ச.கண்ணப்பன்‌ 21.08.2024 முதல்‌ 03.09.2024 வரை ஈட்டிய விடுப்பு விண்ணப்பித்துள்ளதால்‌, பள்ளிக் கல்வி இயக்குநரின்‌ பணிகளை கவனிக்கும்‌ பொருட்டு நிர்வாக நலன்‌ கருதி, தற்போது தனியார்‌ பள்ளிகள்‌ இயக்குநராக பணிபுரியும்‌ முனைவர்‌ மு.பழனிச்சாமிக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்திற்கான முழு கூடுதல்‌ பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.