நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 35 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக புதிய விவரங்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 


2022ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை எழுத 17,572 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்த 12,840 மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி ( 35% )அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பெரும்பாலான மாவட்டங்களில் 20% முதல் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் 7% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


விழுப்புரத்தில் தேர்வு எழுதிய 131 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 100% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களிலும் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


சென்னை நிலவரம் 


சென்னையில் நீட் தேர்வை 172 மாணவர்கள் எழுதிய நிலையில், 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 2021ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 8,061 அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில், அதில் 1,957 பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. 


குறைந்த தமிழ்நாட்டு தேர்ச்சி விகிதம்


நாடு முழுவதும் 2022ஆம் ஆண்டில், 17.64 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், அதில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களின் தேர்ச்சி விகிதம் 56.3% ஆக உள்ளது. ஒட்டுமொத்தத் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. எனினும் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் 2 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது. 


அதேபோல நீட் தேர்வில் தேசிய அளவில் 715 மதிப்பெண்கள் பெற்றதே முதலிடமாக உள்ளது. தமிழக அளவில் 705 மதிப்பெண்களைப் பெற்று 30ஆவது இடத்தை த்ரிதேவ் விநாயகா என்ற மாணவர் பெற்றுள்ளார். அடுத்ததாக 43 இடத்தை ஹரிணி என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் 702 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். 


மாநில வாரியாகப் பார்க்கும்போது உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநில மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த முறை 132,167 மாணவர்கள் நீட் தேர்வை எழுதி இருந்தனர். இதில் 17,517 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்ற நிலையில், இதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 


5 ஆண்டு புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?


தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டில் 39.56 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த விகிதம் 2019ஆம் ஆண்டில் 48.57 ஆக உயர்ந்தது. இது 2020ஆம் ஆண்டில் 57.43% மாணவர்களாக உயர்ந்தது. எனினும் 2021ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 3 சதவீதம் அளவுக்குக் குறைந்து, 54.40 ஆக இருந்தது. இது தற்போது மேலும் குறைந்து 51.28% ஆக உள்ளது. 


2020ஆம் ஆண்டு 99,610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி, 57,215 பேர் தேர்ச்சிபெற்றனர். அதாவது 2020-ல் 57.43 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்திருந்தனர். 2021-ல் 1,12,894 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 1,08,318 பேர் தேர்வை எழுதினர். இதில், 58,922 மாணவர்கள் (54.40%) தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு (2022-ல்) 51.28% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 1,32,167 பேர் தேர்வு எழுதி, அதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.