நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 29 வது பட்டமளிப்பு விழா பல்கழைக்கழகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சரும், இணைவேந்தருமான பொன்முடி கலந்து கொள்ளவில்லை.


கடந்த 2021- 22 ஆம் ஆண்டுகளில் இளநிலை பட்டப்படிப்பு,  பட்டம் மேற்படிப்பு ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றில் முடித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழத்தின் கிளை கல்லூரிகளில் மொத்தம் 13,236 ஆண்களும், 30,625 பெண்கள் என 43,861 பேர் பட்டம் பெற தகுதியானவர்களாக உள்ளனர். 


இவர்களில் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு முடித்த 948 பேர் மற்றும் பல்வேறு பாடங்களில் முதலாம் இடம்பிடித்து பதக்கம் பெறும் 105 நபர்கள் என 1053 நபர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார். காயல்பட்டினம் வாவு மகளிர் கல்லூரி மாணவி ஆங்கிலம் மற்றும் அரபிக் பாடங்களில் முதலிடம் பிடித்து இரண்டு பதக்கங்களை பெற்றார்.


முன்னதாக  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 29ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் விழா மேடையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


‘’இமயம் முதல் குமரி வரை பல்வேறு வளங்களை இந்திய நாடு பெற்றுள்ளது. மேலை நாடுகளில் பல்கலைக்கழகங்கள் உருவாவதற்கு முன்பே நாளந்தா, தக்சசீலம் போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்கள் இருந்தது. பாரம்பரியமிக்க நம் நாட்டில் மேலை நாடுகளில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு முன்பே பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.




கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் இந்தியா இருந்தபோது ஆசியாவிலேயே முதல் பெண் பட்டதாரியாக 1983ல் காதம்பரி என்பவர் பட்டம் பெற்றார். தற்போது அதிகளவில் பெண்கள் பட்டம் பெறுகின்றீர்கள். உலக சுற்றுலாத்தலத்தில்  இந்திய சுற்றுலா துறையால் ”அதிதி தேவோ பவ ” என்ற வாசகம் முழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வாசகம் இந்திய கலாச்சாரத்தையும், இந்து மதத்தையும் பற்றி பேசுகிறது. தைத்ரிய உபநிஷத்தில் வரும் மாத்ரு தேவோ பவ, பிதிர் தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ என்ற முழக்கங்கள் நம் தாய், தந்தை, ஆசான், விருந்தினர்களை கடவுளாக கருதவேண்டும் என சொல்கிறது. மாணவர்கள் அந்த வாசகங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.


பட்டம்பெறுவோர் 20 வயதுடையவராக இருக்கிறீர்கள். நீங்கள் இனி பறந்து விரிந்து இருக்கும் உலகத்திற்கு செல்லப்போகீறீர்கள். 40 வயதில் உலகை முழுதும் தெரிந்துகொண்டு உங்களால் சாதனைபடைக்கமுடியும், மகிழ்ச்சி என்பது வெளி உலகில் எங்கிருக்கிறது என சொல்லமுடியாது. உங்களை நீங்கள் வென்றால் உலகை நீங்கள் வெற்றி பெறமுடியும். 2047 உலகின் இந்தியா முன்னேறிய நாடாக இருக்கும். முன்னேறிய இளம் இந்தியாவை உருவாக்குவதில் இளம் பட்டதாரிகள் மிக முக்கிய பங்காற்ற வேண்டும்.


இந்தியாவின் பழங்காலம் பாரம்பரியமிக்கதாக உள்ளது. வருங்காலம் ஒளிமிகுந்த காலமாக அமைய உள்ளது. தற்போதைய சூழலில் நிச்சயமற்ற நிலை இருந்து வருகிறது. 2047-ல் இந்திய உலகின் தலை சிறந்த நாடாக மாறுவதற்கான கட்டமைப்பு பணிகளை இளம் பட்டதாரிகள் மேற்கொள்ள வேண்டும். இளம்பட்டதாரிகள் இந்த நாட்டிற்கு பல்வேறு பணிகளை திருப்பி அளிக்க வேண்டியதுள்ளது. சமூக பங்களிப்பை நீங்கள் நம் நாட்டிற்கு வழங்குவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்.  நாடு ஒளிமிகுந்த பாதையை அடைய இளம்பட்டதாரிகள் தங்களது பங்களிப்பை செய்யவேண்டும்’’.


இவ்வாறு பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் பேசினார்..




இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர். என் ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். குறிப்பாக நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் மற்றும் இணைவேந்தரான தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பிப்பர். ஆனால் இந்தாண்டு குறிப்பாக இன்று நடைபெற்ற பட்டமளிப்புவிழாவில் உயர்கல்வித்துறை அமைச்சரும், இணைவேந்தருமான பொன்முடி கலந்து கொள்ளவில்லை.


நேற்று காலை முதல் அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் என அனைத்து பகுதிகளிலும் அமலாக்கதுறை சோதனை நடத்தியது. பல மணி நேரம் நடந்த சோதனை தொடர்ந்து இன்று மாலை மீண்டும் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு விடுபட்ட அமைச்சர் பொன்முடி மீது சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.


மேலும் அண்மைக்காலமாக ஆளுநருக்கும்,  திமுக அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிப்பதிலும் எதிரொலித்தது. இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை சோதனையால்  அமைச்சர் இன்று தூத்துக்குடியில் பங்கேற்க இருந்த  நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் நெல்லையில்  நடைபெறும் பட்டமளிப்பு விழாவில்  ஆளுநர்  மட்டும் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.