அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஓபிஎஸ் தி.மு.க அரசை வலியுறுத்தி உள்ளார். 


இதுகுறித்துத் தமிழ்நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ வெளியிட்டுள்ள‌ அறிக்கை:


''தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ 2023 ஆம்‌ ஆண்டிற்கான புதிய தேர்வு அட்டவணையை வெளியிட்டதைத்‌ தொடர்ந்து, காலிப்‌ பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு அட்டவணை அமையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி 2023 ஆம்‌ ஆண்டிற்கான அரசுப்‌ பணித்‌ தேர்வுகள்‌ அட்டவணையை தற்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டுமென்று நான்‌ அறிக்கை வெளியிட்டு இருந்தேன்‌. சமூக ஊடகங்களும்‌, பத்திரிகைகளும்‌ இது குறித்த செய்திகளை வெளியிட்டன.


இதற்கு பதில்‌ அளிக்கும்‌ விதமாக அரசு வெளியிட்டுள்ள 'செய்தி வெளியீடு”, “பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்‌ கொட்டை பாக்கு விலை பத்து பைசா” என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. அதாவது, “அரசுத்‌ துறைகள்‌, கல்வி நிலையங்களில்‌ காலியாக உள்ள 3.5 இலட்சம்‌ பணியிடங்கள்‌ நிரப்பப்படும்‌” என்ற வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால்‌, தனியார்‌ நிறுவனங்களில்‌ 1,063 முகாம்கள்‌ மூலம்‌ ஒரு இலட்சத்திற்கும்‌ மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியீட்டில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. 


அரசின்‌ திறமையின்மை


அரசைப்‌ பொறுத்தவரையில்‌ அரசுத்‌ துறைகளிலும்‌, கல்வி நிலையங்களிலும்‌ காலியாக உள்ள இடங்களை நிரப்புவதுதான்‌ அதன்‌ முதல்‌ கடமை. அதைத்தான்‌ இளைஞர்கள்‌ எதிர்பார்க்கிறார்கள்‌. அதைச்‌ செய்யாமல்‌, தனியார்‌ நிறுவனங்களில்‌ ஒரு இலட்சத்திற்கும்‌ மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறுவது அரசின்‌ திறமையின்மையை எடுத்துரைக்கும்‌ விதமாக அமைந்துள்ளது.


தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ தவிர, ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌, மருத்துவப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌, சீருடை பணியாளர்‌ தேர்வுக்‌ குழுமம்‌ ஆகியவற்றின்‌ மூலமும்‌, அரசு வேலைவாய்ப்பகங்கள்‌ மற்றும்‌ செய்தித்தாள்‌ விளம்பரம்‌ மூலமும்‌, கருணை அடிப்படையிலும்‌ அரசு காலிப்‌ பணியிடங்கள்‌ நிரப்பப்படுவதாக செய்தி வெளியீட்டில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. இது அனைவரும்‌ அறிந்த ஒன்றுதான்‌. அதே சமயத்தில்‌, எத்தனை காலிப்‌ பணியிடங்கள்‌ நிரப்பப்பட்டுள்ளன என்பது குறித்தோ அல்லது எத்தனை காலிப்‌ பணியிடங்களுக்கு அறிவிக்கைகள்‌ கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தோ தெளிவானத்‌ தகவல்‌ ஏதும்‌ தரப்படவில்லை. இதுபோன்ற தகவலை அரசு செய்தி வெளியீட்டில்‌ தெரிவிக்காததிலிருந்தே, சொல்லிக்‌ கொள்ளும்‌ அளவுக்கு காலிப்‌ பணியிடங்கள்‌ நிரப்பப்படவில்லை என்பது தெளிவாகிறது.


வழக்குகளைக்‌ காரணம்‌ காட்டுவதா?


நீதிமன்றத்தில்‌ உள்ள வழக்குகளும்‌ காலிப்‌ பணியிடங்களை நிரப்பாததற்கு ஒரு காரணம்‌ என்று அரசு செய்திக்‌ குறிப்பில்‌ குறிப்பிடப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில்‌ உள்ள வழக்குகள்‌ சிறு எண்ணிக்கையிலான காலிப்‌ பணியிடங்களுக்கு தடையாக இருக்கலாமே தவிர, அதிக எண்ணிக்கையைக்‌ கொண்ட குரூப்‌ 4, குரூப்‌ 2, 24, போன்ற பணியிடங்களுக்கு எவ்விதமான தடையும்‌ இல்லை என்றே நான்‌ கருதுகிறேன்‌. எனவே, நீதிமன்றத்தில்‌ உள்ள வழக்குகளைக்‌ காரணம்‌ காட்டுவது என்பது ஏற்றுக்‌ கொள்ளத்தக்கதல்ல.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா‌, 2011 ஆம்‌ ஆண்டு ஆட்சிப்‌ பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மற்றும்‌ வேலைவாய்ப்பகங்கள் மூலம்‌ அரசுத்‌ துறைகளில்‌ 54,420 பணியிடங்களையும்‌, தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மூலம்‌ 13,376 இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ பணியிடங்கள்‌ மற்றும்‌ 205 உதவி ஆய்வாளர்‌ பணியிடங்களையும்‌, பள்ளி மற்றும்‌ கல்லூரிகளில்‌ 64,435
ஆசிரியர்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ அல்லாத பணியிடங்களையும்‌, 16,793 சத்துணவு அமைப்பாளர்‌, சமையலர்‌ மற்றும்‌ சமையல்‌ உதவியாளர்‌ பணியிடங்களையும்‌, 11,803 அங்கன்வாடி பணியாளர்‌ பணியிடங்களையும்‌ நிரப்பினார்‌.


இது தவிர, அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களில்‌ 16,963 பணியிடங்களும்‌ கூட்டுறவு நியாய விலைக்‌ கடைகளில்‌ 6,307 பணியிடங்களும்‌; தமிழ்நாடு மின்சார வாரியத்தில்‌ 5,489 பணியிடங்களும்‌ நிரப்பப்பட்டன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்‌, ஆட்சிப்‌ பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில்‌ கிட்டத்தட்ட 2 லட்சம்‌ நபர்களுக்கு
அரசு வேலைவாய்ப்புகள்‌ வழங்கப்பட்டன. இது சாதனை!


சப்பைக்கட்டு அறிக்கை


ஆனால்‌, தற்போதைய தி.மு.க. ஆட்சியில்‌ நிலைமை தலைகீழாக உள்ளது. இளைஞர்கள்‌ வேலைவாய்ப்பின்றி இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்‌. அவர்களின்‌ எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. தி.மு.க.வின்‌ தேர்தல் அறிக்கையிலேயே, மூன்றரை இலட்சம்‌ காலிப்‌ பணியிடங்கள்‌ இருப்பதாக குறிப்பிட்டுள்ள நிலையில்‌ அதில்‌ பத்து விழுக்காட்டினைக்‌ கூட ஒன்றரை ஆண்டு காலத்தில்‌ நிரப்பாதது, நிரப்ப நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கும்‌ செயலாகும்‌. அரசுத்‌ துறைகள்‌ மற்றும்‌ கல்வி நிலையங்களில்‌ உள்ள காலிப்‌ பணியிடங்களுக்கு ஏற்ப அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற உண்மை நிலையை மறைக்க, காலிப்‌ பணியிடங்கள்‌ நிரப்பப்படுவது போன்ற ஒரு மாயத்‌ தோற்றத்தை உருவாக்க அரசு சார்பில்‌ செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு சப்பைக்கட்டு அறிக்கை. 


அதே சமயத்தில்‌, அம்மா உணவகங்கள்‌ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ்‌ பணியாற்றுகின்றவர்களை நீக்கும்‌ நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது.  பல்வேறு வாரியங்களிலும்‌, உள்ளாட்சி அமைப்புகளிலும்‌  ஒப்பந்த அடிப்படையில்‌ பணியாற்றி வந்த ஊழியர்களை எல்லாம்‌ வீட்டிற்கு அனுப்புவதையும்‌, வெளிமுகமைமின்‌ மூலம்‌ அந்தப்‌ பணிகளை நிரப்புவதையும் தி.மு.க. அரசு வாடிக்கையாக கொண்டு வருகிறது. சுருக்கமாகச்‌ சொல்ல வேண்டுமென்றால்‌ அரசுப்‌ பணியாளர்களின்‌ எண்ணிக்கையை குறைக்கும்‌ நடவடிக்கையில்‌ தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது. 


லட்சக்கணக்கான இளைஞர்கள்‌ 


அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ சங்கங்களே இதனை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன. சோதனையின்‌ உச்சியிலும்‌, வேதனையின்‌ விளிம்பிலும்‌ அரசு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்துக்‌ காத்துக்‌ கொண்டிருக்கும்‌ லட்சக்கணக்கான இளைஞர்கள்‌ இருக்கிறார்கள்‌. இந்த நிலையிலும்‌, தி.மு.க.வின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ குறிப்பிட்டுள்ளதுபோல்‌, பெருமளவிலான காலிப்‌ பணியிடங்களை நிரப்ப வருங்காலங்களில்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்ற உத்தரவாதத்தினை அளித்து, அதற்கேற்ப மேல்நடவடிக்கை எடுக்காமல்‌, பூசி மொழுகுவது போன்று ஒரு செய்திக்‌ குறிப்பினை அரசு சார்பில்‌ வெளியிடுவது கடும்‌ கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செய்தி வெளியீடு, அரசு தன்‌ முடிவிலிருந்து மாறவில்லை என்பதையே எடுத்துக்‌ காட்டுகிறது. ஒரு வேளை இதுதான்‌ திராவிட மாடல்‌ அரசின்‌ சாதனை போலும்‌!


முதலமைச்சர்‌ இதில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, எத்தனை அரசுப்‌ பணியிடங்கள்‌ காலியாக உள்ளன என்பது குறித்தும்‌; தி.மு.க. ஆட்சிப்‌ பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில்‌ எத்தனை காலிப்‌ பணியிடங்கள்‌ பல்வேறு அரசு முகமைகள்‌ மூலம்‌ நிரப்பப்பட்டுள்ளன என்பது குறித்தும்‌ நீதிமன்ற வழக்குகள்‌ நிலுவையில்‌ இருப்பதன்‌ காரணமாக எத்தனைப பணியிடங்களை நிரப்ப இயலாத சூழ்நிலை உள்ளது என்பது குறித்தும்‌, வரும்‌ காலத்தில் அறிக்கை வெளியிட வேண்டும்.


வரும் ஆண்டுகளில்‌ உத்தேசமாக எத்தனைப்‌ பணியிடங்கள்‌ நிரப்பப்பட உள்ளன என்பது குறித்தும்‌ ஒரு விரிவான அறிக்கையை வெளியிட வேண்டுமென்றும்‌, இளைய சமுதாயத்தினரின்‌ எதிர்காலத்தினைக்‌ கருத்தில்‌ கொண்டு அனைத்துகாலிப்‌ பணியிடங்களையும்‌ உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.''. 


இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.