Schools Holiday in Puducherry: புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 1 மற்றும் 2 தேதிகள்) பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி விடுதலை நாள் (Puducherry Liberation Day) மற்றும் அனைத்து ஆத்மாக்களின் தினம் (All Souls' Day) ஆகியவற்றை அனுசரிக்கும் வகையில் இந்த 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி புதுச்சேரி முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் இணை இயக்குநர்களுக்கு இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.
ஏன் நவம்பரில் விடுதலை நாள்?
பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி, சுதந்திரம் பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிரெஞ்சு கொடி இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இருப்பினும் இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்ததற்கான ஒப்பந்தத்திற்கு 8 ஆண்டுகளுக்கு பின் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதியன்று பிரெஞ்சு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதுவரை நவம்பர் 1 ஆம் தேதியன்று புதுச்சேரி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வந்தது.
1962 ஆம் ஆண்டுக்கு பின் புதுச்சேரியின் சுதந்திர தினம் நவம்பர் 1ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 16ஆம் தேதியாக மாற்றப்பட்டது. புதுச்சேரியின் உண்மையான விடுதலை நாள் நவம்பர் 1 ஆம் தேதி என்றும் அன்றைய தினத்தையே விடுதலை நாளாக கொண்டாட வேண்டும் என பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1 ஆம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாகவும், அரசு விடுமுறை தினமாகவும் மாநில அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து புதுச்சேரி அரசின் சார்பில் விடுதலை நாள் விழா ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அனைத்து ஆத்மாக்களின் தினம்
சில கிறித்தவ சபைகள் இறந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்ற ஒரு சிறப்பு விழா ஆகும். இதனைக் கல்லறைத் திருநாள் எனவும் அழைப்பர். கத்தோலிக்க திருச்சபை உட்பட பல கிறித்தவ சபைகள் இவ்விழாவை நவம்பர் மாதம் இரண்டாம் நாள் கொண்டாடுகின்றன.
இந்த நாள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நினைவு கூரப்படுகின்றது. இது புனிதர் அனைவர் பெருவிழாவுக்கு அடுத்த நாளாகும். இந்த நாளுக்கான திருப்பலி வாசகங்கள் இறந்தோருக்காகக் குறிக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து தேர்ந்து கொள்ளப்படும். நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஞாயிறாக இருந்தால், ஆங்கிலிக்க ஒன்றியத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்தது போல அடுத்த நாளான நவம்பர் 3 அன்று இந்த நாள் நினைவு கூரப்படும்.
இறந்தவர்களின் நிரந்தரப் பிரிவால் வாழ்பவர்கள் வாடி நிற்காமல், மகிழ்ச்சியுடன் அவர்களை அனுப்பி வைக்கவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி விடுதலை நாள் (Puducherry Liberation Day) மற்றும் அனைத்து ஆத்மாக்களின் தினம் (All Souls' Day) ஆகியவற்றை அனுசரிக்கும் வகையில் புதுச்சேரியில் 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.