181 மகளிர்‌ உதவி மையம்‌ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நவம்பர்‌ 25 முதல்‌ டிசம்பர்‌ 10 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. 


தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் இன்று (22.11.2022) தலைமைச்‌ செயலகத்தில்‌, 181 மகளிர்‌ உதவி மையத்தின்‌ (181 Women Helpline) திட்டத்‌ தலைவர்‌ ஷரின்‌ பாஸ்கோ, டிஜிட்டல்‌ மீடியா நிபுணர்‌ கிஷோர்‌ தேவா மற்றும்‌ டிஜிட்டல்‌ மீடியா இயக்குநர்‌ மெரின்‌ ஆகியோரை சந்தித்துப் பேசினார். 


முதல் அமைச்சருக்கு அழைப்பு


நவம்பர்‌ 25ஆம்‌ தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Elimination of Violence against Women) கொண்டாடப்படுகிறது. இதற்காக  “181 மகளிர்‌ உதவி மையம்‌” பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நவம்பர்‌ 25 முதல்‌ டிசம்பர்‌ 10 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. 




இதை ஒட்டி, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் 181 மகளிர்‌ உதவி மையத்தின்‌ (181 Women Helpline) திட்டத்‌ தலைவர்‌ ஷரின்‌ பாஸ்கோ சந்தித்துப் பேசினார். அப்போது “பெண்ணியம்‌ போற்றுவோம்‌ 2022” என்ற தலைப்பில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ அந்த மையம்‌ நடத்தவுள்ள நிகழ்ச்சியில்‌ கலந்து கொள்ள கேட்டு அழைப்பு விடுத்தனர்‌.


அது என்ன 181 மகளிர்‌ உதவி மையம்?


தமிழ்நாடு அரசின்‌ ‌'181 மகளிர்‌ உதவி மையம்‌' பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளின்‌ பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும்‌ செயல்படும்‌ ரகசிய சேவை மையம்‌ ஆகும்‌. இதன் மூலம்‌ குடும்பப் பிரச்சினை உள்ளிட்ட வன்முறைகளால்‌ பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத் துறை, சட்ட உதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள்‌ வழங்கப்படுகின்றன. 


கட்டணமில்லா தொலைபேசி எண்ணான இது முதன்முதலில் தேசத்தின் தலைநகர் டெல்லியில் தொடங்கப்பட்டது. கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, கொடூரமாக தாக்கப்பட்டு உயிரையும் இழந்தார்.  இதையடுத்து மத்திய அரசு ஏற்படுத்திய நிர்பயா நிதி ஒதுக்கீட்டின் கீழ் மகளிருக்கான உதவி எண் 181 தொடங்கப்பட்டது. முதலில் டெல்லியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை, பின்னர் குஜராத், மும்பை, ஹைதராபாத் என அடுத்தடுத்து விரிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இச்சேவை செயல்படுகிறது. 




181 இலவசத் தொலைபேசி எண்‌, மின்னஞ்சல்‌, ஆன்லைன்‌ உரையாடல்‌ போன்றவை மூலமாக, 181 உதவி மையத்தை நாடும்‌ வசதி உள்ளது. மேலும்‌, பெண்களுக்காக அரசால்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ நலத்திட்டங்கள்‌ குறித்த விவரங்களையும்‌, குடும்ப வன்முறை மற்றும்‌ இதர வகை கொடுமைகளால்‌ பாதிக்கப்படும்‌ பெண்களுக்கு அரசு வழங்கும்‌ உதவிகள்‌ குறித்தும்‌ கேட்டறியலாம்‌.


இந்த நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தையொட்டி 181 மகளிர்‌ உதவி மையம்‌ சார்பில், ’பெண்ணியம்‌ போற்றுவோம்‌ 2022’‌ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. 




சிறப்பு அமர்வுகள் என்னென்ன?


இந்த நிகழ்ச்சியில்‌, திரைப்பட விழா, மகளிர்‌ உதவி மையத்தின்‌ விழிப்புணர்வு பயிலரங்கம்‌, கல்லூரிகளில்‌ பெண்கள்‌ பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கும்‌ நிகழ்வு, சைக்கிள்‌ பேரணி, மணல்‌ சிற்பக்கலை, ஆன்லைன்‌ வழியே கருத்தரங்கம்‌ போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள்‌ நடைபெற உள்ளன.


கூடுதல் தகவல்களுக்கு: https://tn181whl.org/tamil/