சென்னை ஐஐடி நியமனங்களில் இட ஒதுக்கீடு 14 சதவீதத்தை தாண்டவில்லை என்றும் சமூகநீதியை எட்டுவது எப்போது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், ஐ.ஐ.டியின் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் ஒட்டுமொத்தமாகவே 14 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் சமூகநீதிக்கான குரல்கள் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஐ.ஐ.டி வளாகங்களில் மட்டும் அந்த குரலே நசுக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
சென்னை ஐ.ஐ.டி.யில் 2021 மார்ச் நிலவரப்படி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 596 ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 62 பேர், அதாவது 10.40% மட்டும் தான். பட்டியலினத்தவர் எண்ணிக்கை 16, அதாவது 2.68% மட்டும் தான். பழங்குடியினரின் எண்ணிக்கை மூவர், அதாவது அரை விழுக்காடு தான். பேராசிரியர்கள் பணியிடங்களை மட்டும் எடுத்துக் கொண்டால், மொத்தமுள்ள 308 பணியிடங்களில் ஒன்று மட்டுமே பழங்குடியினருக்கு கிடைத்துள்ளது. இது வெறும் 0.32% தான்.
உயர் சாதிக்கு எல்லையே இல்லாமல் பணிகள்
மத்திய அரசுப் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர்களில் 160 பேர் பிற்படுத்தப்பட்டவராகவும், 89 பேர் பட்டியலினத்தவராகவும், 45 பேர் பழங்குடி வகுப்பினராகவும் இருக்க வேண்டும். ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய இடங்களில் மூன்றில் ஒரு பங்கும், பட்டியலினத்தவருக்கான உரிமையில் ஆறில் ஒரு பங்கும், பழங்குடியின மக்களுக்கான உரிமையில் பத்தில் ஒரு பங்கும் மட்டும் தான் கிடைத்திருக்கிறது. ஆனால், உயர் சாதியினருக்கு மட்டும் எல்லையே இல்லாமல் 86.60% பணிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.
ஐ.ஐ.டி. பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சமூகநீதி குறித்து 30 ஆண்டுகளாக குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், ஐ.ஐ.டி நிர்வாகம் மட்டும் கேளாக் காதினராகவே உள்ளது. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி சென்னை ஐ.ஐ.டி. ஆசிரியர்களில் ஓபிசி பங்கு 9.64%, பட்டியலினத்தவர் பங்கு 2.33%, பழங்குடியினரின் பங்கு 0.43% ஆகவும் இருந்தது. இப்போது அந்த அளவு சற்று அதிகமாகி உள்ளது. இதற்கான காரணம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்தது அல்ல... மாறாக, உயர்வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர்கள் சற்று அதிக எண்ணிக்கையில் ஓய்வு பெற்றதுதான்.
ஐ.ஐ.டி. பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பணியிடங்களை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்புத் தேர்வின் மூலம் நிரப்ப வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதை கடந்த 2019ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அவ்வாறே ஆணை பிறப்பித்தது.
அதனடிப்படையில் சென்னை ஐ.ஐ.டியில் 49 பணியிடங்கள் பின்னடைவு பணியிடங்களாக அறிவிக்கப் பட்டு, அவற்றை சிறப்பு ஆள் தேர்வு மூலம் நிரப்ப கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கை வெளியிடப் பட்டது. ஆனால், அதிலும் கூட ஓபிசி 14 இடங்கள், பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் 10 இடங்கள் என 24 பணியிடங்களை மட்டும் நிரப்பிய ஐஐடி நிர்வாகம், மீதமுள்ள பணியிடங்களுக்கு தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்று கூறி இட ஒதுக்கீட்டுப்பிரிவுக்கான 25 இடங்களை நிரப்பவில்லை.
பெயரளவில் மட்டும் இட ஒதுக்கீடு
ஐ.ஐ.டி பணி நியமனங்களில் தொடக்கத்தில் இட ஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப்பட்டது. பின்னர் பெயரளவில் சிலருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கி, மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் உயர் வகுப்பினருக்கு மடை மாற்றப்பட்டன. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதி வழங்குவதற்காக நடத்தப்படும் சிறப்பு ஆள் தேர்வுகளில் கூட, தகுதியானவர்கள் இல்லை என்று கூறி இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்றால் நிர்வாகத்தில் உள்ளவர்களின் மனதில் எந்த அளவுக்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உணர்வு ஊறிக்கிடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
ஐ.ஐ.டிகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவற்றில் இட ஒதுக்கீடு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஐஐடி நிர்வாகங்கள் அதை மதிக்க மறுக்கின்றன. இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வாக இருந்தாலும் கூட, பங்கேற்கும் போட்டியாளர்களில் அதிக தகுதி படைத்தவர்கள் யாரோ, அவர்களை தேர்ந்தெடுக்கும் முறைதான் இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், ஐஐடி நிர்வாகங்கள், தங்களுக்கென ஓர் அளவுகோலை வைத்துக் கொண்டு இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை தகுதியற்றவர்கள் என்று கூறி நிராகரிப்பதும், பின்னர் அந்தப் பணியிடங்களை பொதுப்பிரிவுக்கு மாற்றி தங்களுக்கு விருப்பமானவர்களை நியமித்துக் கொள்வதும் காலம் காலமாக நடைபெறும் அநீதிகள். இந்த அநீதி அகற்றப்படும் வரை ஐ.ஐ.டிகளில் சமூக நீதியை வளர்க்க முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை.
இந்தியாவின் புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐ.ஐ.டிகளில் சமூக நீதியை நிலை நிறுத்துவதற்கான போராட்டம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. ஆனாலும் பயன் கிடைக்கவில்லை. ஐ.ஐ.டிகளில் சமூக நீதியை உறுதி செய்ய இன்னும் எவ்வளவு தொலைவு பயணம் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இந்த நிலை இப்படியே தொடர்வதை அனுமதிக்கக் கூடாது. ஐ.ஐ.டிகளில் சமூக நீதியை உறுதி செய்ய அங்கு நடைபெறும் பணி நியமனங்களை கண்காணிக்க, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.