12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வரும் நிலையில், இதில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில்  சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியில்  14 ஆயிரத்து 728 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர்.  விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.


 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் 79 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் பங்கேற்று விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பில், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் மே 7 ஆம் தேதி இளநிலை  மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆக, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலையை பாதிக்கலாம் என பலரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு அரசு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தது. 


தேர்வு முடிவுகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்


சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்  இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள் www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ,  www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8.3 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 12 ஆம் வகுப்பு தேர்வில் 47,934 மாணவ, மாணவியர்கள் தோல்வியடைந்துள்ளனர். 


துணைத் தேர்வுகள் எப்போது? 


இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் 19 ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சரியாக விண்ணப்பித்து தேர்வுகளை எழுத வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இன்று மாலைக்குள் துணைத்தேர்வு குறித்த அறிவிப்பு முழுமையாக வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என சொல்லப்பட்ட நிலையில், அவர்களையும் தேர்வு எழுத முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.