12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்கள்  துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி வெளியாகியிருந்தது. மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வுகளை தமிழ்நாட்டில்  8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியில்  14 ஆயிரத்து 728 பேரும் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும்  8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 7,55,450 பேர் தேர்ச்சி பெற, 47,934 மாணவ, மாணவியர்கள் தோல்வியடைந்தனர். 


இப்படியான நிலையில், தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களும் இதற்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான நடைமுறைகளும் வெளியிடப்பட்டன.  தொடர்ந்து  ஜூன் 19 ஆம் தேதி முதல்  ஜூன் 24 வரை துணைத்தேர்வு நடத்தப்படும் என அட்டவணை வெளியிடப்பட்டது. இதற்காக மே 9 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிக்கும் முறை 


பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாக தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள்‌  துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின்‌ (Government Examinations Service Centres) விவரங்கள்‌ மற்றும்‌ ஆன்லைனில்‌ விண்ணப்பங்கள்‌ பதிவு செய்தல்‌,  தனித்தேர்வர்களுக்கான தகுதி ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்‌.


இதேபோல் அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகங்கள்‌, அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகங்கள்‌ மற்றும்‌ அனைத்து அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகங்கள்‌ வாயிலாகவும்‌ அறிந்து கொள்ளலாம்‌.


ஆன்‌லைனில்‌ விண்ணப்பத்தினை பூர்த்தி செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச்‌ சீட்டு வழங்கப்படும்‌. அரசுத்‌ தேர்வுத்‌ துறை பின்னர்‌ அறிவிக்கும்‌ நாளில்‌ இந்த சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி, ஹால் டிக்கெட்டுகளை  பதிவிறக்கம்‌ செய்ய வேண்டும். இதனால்‌, ஒப்புகைச்‌ சீட்டினை தனித்தேர்வர்கள்‌ பாதுகாப்பாக வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.