சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை நள்ளிரவு முதல் பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் மழை காரணமாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
கொட்டித்தீர்க்கும் கனமழை:
12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. வழக்கமாக பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்காகவும், தவிர்க்க முடியாத சூழல் காரணமாக தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்காகவும் துணைத்தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் 19 முதல் ஜூன் 24-ந் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், நேற்று முதலே தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று நள்ளிரவு முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
துணைத்தேர்வு:
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் இன்று திட்டமிட்டபடி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடைபெறுமா? என்று கேள்வி எழுந்தது.
இதையடுத்து, திட்டமிட்டபடி இன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இதனால், மாணவர்கள் இன்று நடைபெறும் துணைத்தேர்விற்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு ஹால் டிக்கெட்டுடன் மறக்காமல் செல்ல வேண்டும். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழை பெய்யும் பகுதிகளில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் மழை காரணமாக தேர்விற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துணைத்தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச்சீட்டுகளை மாணவர்கள் கடந்த 14-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: TN 2023 NEET Data: அதிகரித்த அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்ச்சி விகிதம்; சேலத்தில்தான் அதிகம்- முழு விவரம் இதோ!
மேலும் படிக்க: JEE Advanced Result 2023: ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு - எங்கு, எப்படி அறியலாம்.. விவரங்கள் இதோ..