11, 12ஆம் வகுப்பு விடைத் தாள் மதிப்பீட்டு முகாமில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலராக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி நிலையில் உள்ளவர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு,  மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 


2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் தாமதமாக மே மாதம் தொடங்கி, அதே மாதத்தில் முடிவடைந்தன. இந்த நிலையில் 2022- 23 ஆம் கல்வி ஆண்டு எந்த தாமதமும் இல்லாமல் ஜூன் மாதம் தொடங்கியது. கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், அனைத்துப் பள்ளிகளிலும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்றன. 


இந்த நிலையில், 11 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 3ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் தேர்வுகளுடன் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவடைகிறது.  7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர்.


11ஆம் வகுப்புக்கு மார்ச் 14ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுதி வருகின்றனர்.



 


இந்த நிலையில், 11, 12ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலராக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் உள்ளவர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர்‌ சேது ராம வர்மா, மேல்நிலைத்‌ தேர்வு அனைத்து முகாம்‌ அலுவலர்களுக்கும் அறிவுறுத்தலை வழங்கி உள்ளார். அதில், ''11, 12அம் வகுப்பு பொதுத்தேர்வு - விடைத்தாள்‌ மதிப்பீட்டு மையங்களில்‌ மதிப்பெண்‌ சரிபார்ப்பு அலுவலர்கள்‌ நியமனம் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. 


அதில் , விடைத் தாள்‌ மைய மதிப்பீட்டுப்‌ பணிகள்‌ தொடர்பாக 22.03.2023 அன்று நடைபெற்ற முகாம்‌ அலுவலர்களுக்கான அறிவுரைக்‌ கூட்டத்தில்‌ தெரிவிக்கப்பட்டதற்கு ஏற்ப, விடைத் தாள்‌ மதிப்பீட்டு மையங்களில்‌ மதிப்பெண்‌ சரிபார்ப்பு அலுவலர்களாக (MVO) முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்‌ நிலையில்‌ உள்ளவர்களை பட்டுமே நியமனம்‌ செய்யப்பட வேண்டும்''‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.