தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கின. திருவாரூர் மாவட்டத்தில் 15873 மாணவர்கள் தேர்வுகளை எழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 11,12 ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 13ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவு பெற்றது. அதன் தொடர்ச்சியாக 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 72 தேர்வு மையங்களில் 7965 மாணவர்களும் 7908 மாணவிகளும் என 15873 மாணவ மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். இதில் 72 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களும், 72 தேர்வு மைய துறை அலுவலர்களும், 1100 தேர்வு மைய அறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி தேர்வு முறைகேடுகளை தடுக்கும் வகையில் 86 பறக்கும் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ”மாவட்ட முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 72 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்