தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் எதுவுமில்லை என்றும் பொதுத் தேர்வு தேதிகளைத் தவிர்த்து தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு தேதிகளை அறிவிக்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ’’தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் எதுவுமில்லை. பொதுவாக மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கும் முன்னதாக, மாநிலத்தின் தேர்வு தேதிகளுக்கு ஏற்றவாறு அறிவிப்பது வழக்கம். மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவ்வாறு செய்யப்படும். அந்த வகையில், பொதுத் தேர்வு தேதிகளைத் தவிர்த்து தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு தேதிகளை அறிவிக்கும் என்று நம்புகிறேன்.


அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இணையவழி குறைதீர் புலம்


அரசு உதவிபெறும் பள்ளிகளில் வட்டார, மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாகவே கோரிக்கைகள் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் கோரிக்கை எந்த அளவில் இருக்கிறது என்பது தெரியாமல் இருந்தது. எனினும் தற்போது அரசுப் பள்ளிகளைப் போலவே, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள், நிர்வாகம் சார்ந்த கோரிக்கைகளை எளிய முறையில் தீர்த்து வைக்க, இணையவழி குறைதீர் புலம் உருவாக்கப்பட்டுள்ளது.


வழக்கமாக கல்வி முறைகளுக்குள் கொண்டு வருவதற்காக, 10 முதல் 14 வயதுடைய மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.200 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகை 2, 3 படிநிலைகளைக் கடந்துதான் மாணவர்களுக்குக் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது நேரடியாக எந்த கால தாமதமும் இல்லாமல் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளது.’’


இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


தேர்வு எப்போது?


10ஆம் வகுப்புக்கு பிப்ரவரி 23 முதல் 29ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.


தேர்வு முடிவுகள் எப்போது?


மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.