பத்தாம் வகுப்பு , 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 26 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதேபோல மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் மற்றும் துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் குறித்தும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் 9,14,320 மாணவ, மாணவிகள் எழுதிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நேற்று (மே 19) வெளியாகின. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். முன்னதாக 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றன.
78 ஆயிரம் பேர் தோல்வி
இந்தத் தேர்வில் 8,35,614 பேர் தேர்ச்சியடைந்தனர். 78,706 மாணவர்கள் தோல்வியடைந்தனர். இந்த தேர்வில் பெரம்பலூர் (97.67% ), சிவகங்கை (97.53%), விருதுநகர் (96.22%) ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்தன. கடைசி இடம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு (83.54 %) கிடைத்தது. இந்த நிலையில், பத்தாம் வகுப்பு , 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 26 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளதாவது:
’’தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியலை 26.05.2023 (வெள்ளிக் கிழமை) முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரும் மேல்நிலை முதலாமாண்டு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும், 24.05.2023 முதல் 27.05.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டல் எப்போது?
மறுகூட்டல் கோரும் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக 24.05.2023 முதல் 27.05.2023 வரை மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
துணைத் தேர்வுகள் எப்போது?
தேர்வில் தேதர்ச்சி பெறத் தவறிய பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டுமாணவர்களின் எதிர்கால நலன் கருதி துணைத் தேர்வு 27.06.2023 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Government Examinations Service centres) வாயிலாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
23.05.2023 ( செவ்வாய்க் கிழமை) பிற்பகல் 12.00 மணி முதல் 27.05.2023 (சனிக் கிழமை) மாலை 5.0௦ மணிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்நாட்களில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் 30.05.2023 (செவ்வாய்க் கிழமை) மற்றும் 31.05.2023 (புதன் கிழமை) ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்புத் தேர்விற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.500:
மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.1000/-’’
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.