கொரோனா தொற்றுக்காலம் முடிவுக்கு வந்து மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி சுமார் 600 நாட்களுக்குப் பிறகு 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் காளியப்பனூர் ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளிக்கு வருகை தந்த ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மழலை மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அவர்கள் இனிப்புடன் மலர்கொத்து கொடுத்து பள்ளிக்கு வரவேற்றார்.




பின்னர், மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கொரேனா தொற்று குறித்தும், தடுப்பூசி குறித்தும் எழுப்பிய கேள்விகளுக்கு அனைவரும் உடனுக்குடன் பதிலளித்தனர். கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக தற்போது கொரேனா தொற்று கட்டுக்குள் உள்ளது. தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பள்ளிகள் பல நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்தியதன் விளைவாக 9 முதல் 12 ஆம்  வகுப்புகளுக்கு ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.  




அதன் தொடர்ச்சியாக தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான பள்ளிகளை திறக்க  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பிற்கான பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் 820 அரசு பள்ளிகளும் 51 நிதி உதவி பெறும் பள்ளிகளும், 9 பகுதி உதவிபெறும் பள்ளிகளும், நிதியுதவி பெறும் பள்ளிகளும், 182 தனியார் பள்ளிகளும் என  1,062 பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்தப் பள்ளிகளில் 1,08,853 மாணவ மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். 




இந்த பள்ளிகளில் கொரோனா தடுப்பு தொடர்பான அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியில் அமர்வது உள்ளிட்ட அனைத்து வழிகாட்டி நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 




"மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு பள்ளிக்கு ஆர்வத்துடன் வரும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்பது நமது கடமையாகும்" என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில், இன்று அனைத்து பள்ளகளிலும் குழந்தைகளை வரவேற்கும் நிகழ்வுகள் நடத்தப்பட்டது.




மழலை மாணவ, மாணவியர்களை உளவியல் ரீதியாக சரி செய்திடும் வகையில் முதல் இரு வாரங்களுக்கு குழந்தைகளுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான விளையாட்டு உத்திகள் போன்றவற்றை வகுப்பறையில் ஆசிரியர்கள் செயல்படுத்துவார்கள். 




இன்று மாணவ - மாணவிகளிடம் கொரேனா தொற்று குறித்து சில கேள்விகளை கேட்டேன். குழந்தைகளுக்கு கொரோனா தொற்று என்றால் என்ன, எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், ஏன் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற கேள்விகளுக்கு மிகச்சிறப்பாக விடை அளித்தார்கள். கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு குழந்தைகளிடத்திலும் ஏற்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மகிழ்ச்சியாக தெரிவித்தார்.




இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் வருகையை ஒட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர் குறிப்பாக புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஏற்பாட்டில் சிறப்பான முறையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அவரை வரவேற்கும் விதமாக நுழைவாயிலில் வெல்கம் டீசர்ட் அணிந்து மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து மூன்று மாணவிகள் பட்டுப்புடவையில் திருமண வரவேற்பு விழா விற்கு வரவேற்பது போல் பொது மக்களையும், மாணவர்களையும் வரவேற்றனர். இன்று பள்ளிக்கு வந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நுழைவாயில் இனிப்புகள் வழங்கி உள்ளே வரவேற்கப்பட்டது. அதை தொடர்ந்து 7,8,9,10 ஆகிய வகுப்பு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பள்ளியின் சார்பாக சர்க்கரை பொங்கல் வழங்கி பள்ளியின் தலைமையாசிரியர் சிறப்பித்தார்.




கரூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் இன்று வருகையை ஒட்டி அரசு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது. இதேபோல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர் இன்று பள்ளிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் மலர் கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.