அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் உலகின் சிறந்த 2 சதவிகித ஆய்வாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 


ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் அயோனிட்ஸ் தலைமையிலான குழு மற்றும் எல்சிவர் ஆய்வுத்தளம் இணைந்து நடத்திய ஆய்வின்படி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 














பட்டியலில் உள்ள 186177 பேரில் மொத்தம் 2042 பேர் இந்தியாவிலிருந்து இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பிரபல பேராசிரியர்கள் மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோரும் அடக்கம்.இதில் தமிழ்நாட்டிலிர்ந்து மட்டும் 100 ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். கூகுளில் அதிகம் தேடப்படும் ஆய்வு கட்டுரைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.




டாக்டர் மோகன்


தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை மோகன் நீரிழிவு  மையத்தின் தலைவர் மருத்துவர் மோகன் இந்திய ஆய்வாளர்களில் முதலில் உள்ளார். அவர் பட்டியலில் 8741வது இடத்தில் உள்ளார். இவர் தவிர அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ், சென்னை ஐஐடியைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 13 பேராசிரியர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.


இதுகுறித்துத் தனது மகிழ்ச்சியை துணைவேந்தர் வேல்ராஜ் பகிர்ந்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்களைப் பொருத்தவரை வேலூர் கிருத்தவர் மருத்தவக் கல்லூரியைச் சேர்ந்த 10 பேரும் விஐடியை சேர்ந்த 14 பேரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.