தமிழக அரசுத் துறைகளில் 13 ஆண்டுகளாக 10,402 பட்டியலின பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், இதுவா திமுகவின் சமூகநீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


''தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் கிடக்கும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்து மூன்றாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சமூகநீதிக்கான ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டியலினத்தவருக்கான சமூக நீதியை மூன்றாண்டுகளாக முடக்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.


2021ஆம் ஆண்டு அறிவித்த திமுக அரசு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டு, தகுதியானவர்கள் கிடைக்காததால் நிரப்பப்படாமல் பின்னடைவு பணியிடங்களாக அறிவிக்கப்பட்ட ஏராளமான இடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பின்னடைவுப் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021ஆம் ஆண்டு திமுக அரசு அறிவித்தது.

அதன்பின், அடுத்த 6 மாதங்களுக்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவில் தமிழக அரசின் 34 துறைகளில் பட்டியலினத்தவருக்கு 8100, பழங்குடியினருக்கு 2302 பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தெரிய வந்தது. அவை சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்றும் தமிழக அரசு உறுதியளித்திருந்தது.

ஆனால், அதன்பின் மூன்றாண்டுகள் ஆகப்போகும் நிலையில், சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு இருந்த காலத்தில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு துறைகளின் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.


2 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை

தமிழக அரசால் அமைக்கப்பட்ட சமூகநீதி கண்காணிப்புக் குழுவும் இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று 17.10.2022ஆம் நாள் அறிக்கை மூலம் நான் வலியுறுத்தினேன். ஆனால், அதன்பின்னர் 2 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை.


தமிழக அரசு மதிக்கவில்லை

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாத விவகாரத்தில் கடந்த ஆண்டு தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தலையிட்டது. அனைத்து பின்னடைவு பணியிடங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று கடந்த 2023ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தர் ஆணையிட்டார். ஆனால், அந்த ஆணையைக் கூட தமிழக அரசு மதிக்கவில்லை. இப்போது வரை பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே விட்டு வைக்கப்பட்டுள்ளன.

பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவது கடினமான ஒன்றல்ல. எந்தத் துறைகளில் எவ்வளவு இடங்கள்   பின்னடைவுப் பனியிடங்களாக உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு நினைத்தால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக சிறப்பு ஆள்தேர்வு அறிவிக்கையை உடனடியாக  வெளியிட்டு, அடுத்த 3 மாதங்களுக்குள் அனைத்து பின்னடைவு பணியிடங்களையும் நிரப்பிவிட முடியும்.  ஆனால், அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்பதே உண்மை.

தமிழ்நாட்டில் சமூக நீதி ஆட்சி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதற்கு முன்பே பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள 10,402 பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதா சமூக நீதி?

13 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள 10,402 பின்னடைவுப் பணியிடங்களில் 7090 பணி  இடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறையிலும், மதுவிலக்குத் துறையிலும்தான் உள்ளன என்பது வேதனையான உண்மை. உள்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சருக்கு இந்த உண்மை தெரியாதா?


திமுகவின் சமூக அநீதி

சமூகப் படிநிலையில் மிகவும் கீழாக இருக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத்தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி 10,402 பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சமூக நீதியை தடுத்து நிறுத்துவதுதான் சமூக நீதியா?
பின்னடைவு பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட்டிருந்தால், 10,402 குடும்பங்கள் வறுமையிலிருந்தும், சமூக பின்னடைவிலிருந்தும் மீண்டிருக்கும். அதை செய்யத் தவறியது திமுகவின் சமூக அநீதி இல்லையா?

சமூக நீதி என்பதை வெற்று வார்த்தைகளில் மட்டும் வெளிப்படுத்தாமல், செயலிலும் காட்ட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். தமிழக அரசின் 34 துறைகளில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல்  உள்ள பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; சமூக நீதியை காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''.


இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.