1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும், பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு மாதம் இருப்பதால் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.


நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க தமிழ்நாடு அரசு நேற்று அனுமதி அளித்தது. இந்த நிலையில், பள்ளி திறப்பு தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு மாதம் இருப்பதால் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியதாக கூறினார்.




இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், “ஒரு மாதத்திற்குள் பள்ளிகளை தூய்மைப்படுத்தி முறையாக வைத்திருக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் நலன் கருதி அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் உடல்நலனில் அக்கறை கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். பள்ளிகள் திறக்க ஒருமாத காலமே உள்ள நிலையில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறு குழந்தைகள் முதல் பள்ளிக்கு வர உள்ளதால் அனைத்து பள்ளிகளையும் தூய்மையாக பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனிமையில் இருக்கும்போது ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் பள்ளி திறப்பால் குறையும். ” என்று கூறினார்.


மாணவர்களுக்கு எப்போது தேர்வு?


மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடைபெறும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகளில் சிறுசிறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் முழு எண்ணிக்கையில் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை உள்ளது. மாணவர்கள் வருகை அதிகரித்தவுடன் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.


1 முதல் 5ஆம் வகுப்பு பள்ளிகளை பின்னர் தொடங்கலாம்


முன்னதாக, “6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறந்த பிறகு அடுத்த கட்டமாக 1 முதல் 5ஆம் வகுப்புகளை திறக்க வேண்டும். குழந்தைகள் மனஉளைச்சலில் உள்ளதால் பள்ளிக்கூடம் திறப்பதுதான் சரி” என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறினார்.


தமிழ்நாடு அரசின் முடிவை பின்பற்றி புதுச்சேரியிலும் 1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகளை திறக்க ஆலோசனை செய்யப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.