மாணவர்களின்‌ எண்ணிக்கை‌ கூடும்போது, உயர்கல்வியின்‌ தரம்‌ குறைந்துவிடுவதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ இன்று (30.08.2022) சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் 22 பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்‌ மாநாடு நடைபெற்றது. தலைமைச் செயலாளர் இறையன்பு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் 21 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் பிற உயர் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இதில் முதல்வர் பேசியதாவது:


’’ * அகில இந்திய அளவில்‌ தேசியத்‌ தர வரிசைக் கட்டமைப்பில்‌ முதல் ஆயிரம்‌ இடங்களில்‌ 164 இடங்களை அதாவது சுமார்‌ 6 விழுக்காடு இடங்களை தமிழகத்தில்‌ உள்ள கல்லூரிகள்‌, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள்‌ அடைந்து சாதனை படைத்துள்ளன.


* எண்ணிக்கை, தரம்‌ என்ற இரண்டிலும்‌, தமிழக உயர்கல்வி நிறுவனங்கள்‌ உயர்ந்த இடத்தில்‌ இருப்பதைத்‌ தேசியதர வரிசைப்‌ பட்டியல்‌ காட்டுகிறது.


* தேசிய தர வரிசையில்‌, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின்‌ வரிசையில், 6 பல்கலைக்கழகங்களும்‌, பல்கலைக்கழகங்கள்‌ வரிசையில், 5 பல்கலைக்கழகங்களும்‌ இடம்பெற்று, நம்‌ மாநிலத்தை உயர்கல்வியில்‌ முதல்‌ மாநிலமாக நிலைநிறுத்தியுள்ளன.


எண்ணிக்கையால் தரம் குறைகிறதா?


* வரும்‌ ஆண்டுகளில்‌ இந்நிலை மேலும்‌ சிறப்பாக உயரும்‌! மாணவர்களின்‌ எண்ணிக்கை‌ கூடும்போது, உயர்கல்வியின்‌ தரம்‌ குறைந்துவிடுகிறது என்ற வாதத்தை நாங்கள்‌ ஏற்றுக்‌ கொள்வதில்லை. நமக்குக்‌ கல்வித்‌ தரமும்‌ வேண்டும்‌; மாணவர்களின்‌ எண்ணிக்கையும்‌ குறையக்கூடாது! இதில்‌ நமது அரசு உறுதியாக இருக்கிறது.


எடுத்துக்காட்டாக, சென்னை மாநிலக்‌ கல்லூரியில்‌ சுமார்‌ 5000 மாணவர்கள்‌ பயில்கின்றனர்‌. அதேநேரத்தில்‌ தேசியத்‌ தர வரிசையிலும்‌, மூன்றாம்‌ இடத்தை மாநிலக்‌ கல்லூரி பெற்றுள்ளது என்பதையும்‌ நான்‌ இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்‌. பாடத்திட்ட மறுசீரமைப்பில்‌, நமது அரசு முழு ஈடுபாட்டுடன்‌ செயல்பட்டு வருகிறது.


அனைவருக்கும்‌ கல்வி, அனைவருக்கும்‌ உயர்கல்வி, அனைவருக்கும்‌ ஆராய்ச்சிக்‌ கல்வி என்பதை இலக்காக வைத்துள்ளோம்‌. உலகத்தரம்‌ வாய்ந்த ஆராய்ச்சிகளை நமது மாநிலத்தில்‌ செயல்படுத்தவும்‌, ஆசிரியர்கள்‌, ஆராயச்சி மாணாக்கர்கள்‌ மற்றும்‌ இளநிலை மற்றும்‌ முதுநிலை மாணாக்கர்களையும்‌ ஆராய்ச்சி செய்ய ஊக்கப்படுத்தவும்‌, ஆண்டுதோறும்‌ ரூபாய்‌ 50 கோடி அளவில்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌. இதற்கான திட்ட அறிக்கைகள்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களிடம்‌ இருந்து பெறப்பட்டு நிபுணர்‌ குழுவினரால்‌ ஆய்வு செய்யப்பட்டு அவர்களின்‌ பரிந்துரையின்படி நிதி வழங்கப்படும்‌.




முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி ஊக்கத்தொகை


நம்முடைய மாணவர்களின்‌ ஆராயச்சி திறமையை மேம்படுத்தவும்‌, புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டில்‌ ஊக்கப்படுத்தவும்‌ “CM Research Fellowship” “முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி ஊக்கத்தொகை” திட்டம்‌ தொடங்கப்படும்‌. இதற்கான மாநில அளவில்‌ தகுதித்‌ தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள்‌ தேர்வு செய்யப்படுவார்கள்‌.


தொழில்துறையில்‌ ஏற்பட்டு வரும்‌ நவீன மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள்‌, மாணவர்களுக்கு உரிய திறன்‌ சார்ந்த பயிற்சி வழங்க ஏதுவாக தொழில்‌ நிறுவனங்களுடன்‌ இணைந்து “ஆசிரியர்‌ மேம்பாட்டு பயிற்சி” (Faculty Development Programme) வழங்கப்படும்‌.


நீட், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?


பட்டம்‌ வாங்கும்‌ இளைஞர்களை அல்ல, எவரோடும்‌ போட்டியிடும்‌ தகுதி படைத்த இளைஞர்களை தமிழ்நாட்டுக்‌ கல்வி முறையானது உருவாக்கி இருக்கிறது. நீட்‌' தேர்வுக்கு எதிராக நாம்‌ இருக்கிறோம்‌. அந்தத்‌ தேர்வுக்குப் பயந்து அதனை நாம்‌ எதிர்க்கவில்லை.


அது உயர்த்தும்‌ ஏணியாக இல்லாமல்‌ தடைக்கல்லாக இருக்கிறது என்பதால்‌ எதிர்க்கிறோம்‌. படிப்புதான்‌ தகுதியைத்‌ தீர்மானிக்க வேண்டுமே தவிர தகுதியிருந்தால்‌ தான்‌ படிக்கவே வர வேண்டும்‌ என்று சொல்வது, இந்த நூற்றாண்டின்‌ மாபெரும்‌ அநீதி.


இதனால்தான்‌ எதிர்க்கிறோம்‌!


கல்வி உரிமையைப்‌ போராடிப்‌ பெற்ற சமூகம்‌ நாம்‌ என்கிற காரணத்தால்‌ எதிர்க்கிறோம்‌!


போராடி சுயமரியாதையை நிலைநிறுத்திய சமூகம்‌, இந்தத்‌ தமிழ்ச்சமூகம்‌ என்பதால்‌ எதிர்க்கிறோம்‌!


கல்வியால்‌ முன்னேறுகின்ற சமூகம்‌ நாம்‌ என்பதால்‌ எதிர்க்கிறோம்‌!


பின்னால்‌ வரக்கூடிய தீமைகளை கடந்தகால வரலாறுகளின்‌ அடிப்படையில்‌ எடை போட்டு எதிர்க்கிறோம்‌!


எந்தப்‌ படிப்பாக இருந்தாலும்‌ அதனை நோக்கி மாணவர்களை ஈர்ப்பதற்காக, நம்முடைய அணுகுமுறைகளும்‌ திட்டமிடுதலும்‌ இருக்க வேண்டும்‌.


மாணவர்களை கல்வியிடம்‌ இருந்து அந்நியப்படுத்தும்‌ அத்தனையையும்‌ நாம்‌ எதிர்க்க வேண்டும்‌!


அந்த அடிப்படையில்தான்‌ நீட்‌ தேர்வை மட்டுமலல புதிய தேசியக்‌ கல்விக்‌ கொள்கையையும்‌ நாம்‌ எதிர்க்கிறோம்‌!’’


இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.