டிடிஎஃப் வாசன் 


அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து அவர்களிடத்திலே மோகத்தை ஏற்படுத்திவரும் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். இவர் மஞ்சள் வீரன் என்கிற படத்திலே தற்போது நடித்தும் வருகிறார். இந்த நிலையில் TTF வாசன் சென்னையிலிருந்து-மகாராஷ்டிராவிற்கு தனது நண்பரான அஜித் என்பவர் உடன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது ஒருவரைக்கொருவர் முந்தி பைக் ரேஸில் ஈடுபட்டதும் அதிவேகமாக வாகனத்தினை இயக்கி ஸ்டண்ட் என்று சொல்லப்படக்கூடிய வீலிங் சாகசத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. 


மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில்

 

மேலும் வரக்கூடிய வழிகளில் தனது ஆதரவாளர்கள் என்று சொல்லப்படக்கூடிய FOLLOWERS களை வரவழைப்பது, தொடர்ந்து தான் வரும் இடங்கள் குறித்து சமூகவளைதளங்களிலே பதிவிட்டிருக்கிறார். ஆங்காங்கே இளைஞர்கள் சிலர் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கூடியுள்ளனர். அவர்களை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் TTF வாசன் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

 

 சென்னை சென்ற  வாசன்

 

இந்த நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட TTF வாசன் பைக்கின் பின்புறம் சாலையில் தேய்ந்து நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் TTF வாசன் படுகாயமடைந்து காரப்பேட்டை அருகிலுள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

 

தொடர்ந்து அவரது கைக்கு மாவுகட்டானது போடப்பட்டு கால், உடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து தான் சென்னையில் சிகிச்சை பெற்று கொள்வதாக கூறிய நிலையில் அவரது நண்பர்கள் அவரை அழைத்து சென்றிருக்கின்றனர்.

 

பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன்

 

இந்த நிலையில் TTF வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் 279 IPC மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது,  308 IPC பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன், வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர்  சென்னையில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசனை இன்று விடியற்காலையில் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

 

முதல் தகவல் அறிக்கையில் இருப்பது என்ன ?  


காஞ்சிபுரம்  தாமல் பகுதியை சேர்ந்த பால  வேந்தன் என்பவர்  கடந்த 18ஆம் தேதி  பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில்  அளித்த புகாரில்  கடந்த 17ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் சென்னை  வேலூர் தேசிய நெடுஞ்சாலையில்  கிழக்கு பைபாஸ் பாலம் அருகே ஒரு மேட் மோட்டார் சைக்கிள் அதிவேகமாக கவனம் குறைவாக ஓட்டி வந்து ,பொதுமக்கள் பயணம் செய்யக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில்  மனித உயிருக்கு மரண விளைவிக்கும் வகையிலும், மோட்டார் சக்கரத்தில் முன் சக்கரத்தில் தூக்கி ஓட்டிக்கொண்டு சாகசம் செய்து பயங்கரமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட  விபத்தை நேரில் பார்த்தேன்.  கீழே விழுந்து இருந்த நபரை  எழுப்பி விசாரித்த பொழுது தான் டிடிஎஃப் வாசன் என கூறினார்.  அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது  என அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.  இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.