விழுப்புரத்தில் ரூ.10 லட்சம் கேட்டு இளைஞர் ஒருவரை அவரது நண்பர்கள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு சிங்கப்பூர் நகரைச் சேர்ந்த சூர்யகுமார் என்பவர் தனது தாய் கிருஷ்ணவேணியுடன் வசித்து வருகிறார். இதில் கிருஷ்ணவேணி அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதனிடையே  நேற்று முன்தினம் சூர்யகுமாரின் நண்பர்களான சரவணப்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, நந்தா, மாரி, பெரியபாலா, முரளி ஆகியோர் அந்த பகுதிக்கு வந்துள்ளனர்.


திருவெண்ணைய்நல்லூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சூர்யகுமார் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அப்போது இந்த 5 பேரும் நண்பர்களாக பழக்கமாகியுள்ளனர். அந்த வகையில் இவர்கள் மீண்டும் சந்தித்துள்ளனர். அப்போது டீ குடிப்பதற்காக சூர்யகுமாரை 5 பேரும் ஜானகிபுரம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். 


பின்னர் அங்கிருந்து அவரை காரில் ஏற்றி கரடிப்பாக்கத்திற்கு சென்று மறைவான இடத்தில் அடைத்துள்ளனர்.  இந்நிலையில் திடீரென உன் அம்மாவிடம் நிறைய பணம் உள்ளது. எங்களுக்கு ரூ.10 லட்சம் வாங்கித் தருமாறு மிரட்டியுள்ளனர். இதற்கு சூர்யகுமார் மறுக்கவே அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதேசமயம் கிருஷ்ணவேணிக்கு போன் செய்து பணம் எடுத்து வருமாறு மிரட்டவே அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். 


உடனடியாக அவர் அப்பகுதியில் உள்ள தாலுகா காவல் நிலைய அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின்படி ரூ.10 லட்சத்தைப் பேக்கில் எடுத்துக் கொண்டு அந்த கும்பலிடம் கொடுக்க தயாரானார். மீண்டும் கிருஷ்ணவேணியை தொடர்பு கொண்ட அந்த கும்பல் விழுப்புரம் புறவழிச்சாலையில் எல்லீஸ்சத்திரம் சாலைக்கு தனியாக நள்ளிரவு வரவேண்டும் என கூறியுள்ளது. 


அதன்படி சொன்ன இடத்திற்கு பணப்பையுடன் அவர் செல்ல யாருக்கும் தெரியாமல் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது போலீசை கண்டதும் 5 பேர் கொண்ட அந்த நண்பர்கள் கும்பல் காரில் இருந்து சூர்யகுமாரை  இறக்கி விட்டு தப்பியோடினர். காயமடைந்த அவரை மீட்ட போலீசார் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டு 3 தனிப்படை அமைத்து 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இளைஞர் ஒருவர் தன்னுடைய நண்பர்களால் பணம் கேட்டு கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண