மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மணற்குவாரிகள் அமைத்து ஆற்று மணல் அள்ளப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மணல்குவாரிகள் செயல்படாததால் ஆற்று மணலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த சூழலில், இப்பகுதியில் இரவு வேளையில் லாரிகள், டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகளிலும் மணல் கடத்தப்படுவது தொடர் கதையாக இருந்து வந்த நிலையில் காவல்துறையினரின் கெடுபிடியால் அதுவும் ஓரளவிற்கு கட்டுக்குள் உள்ளது.
இருப்பினும் ஆற்று மணல் தான் கட்டுமானத்திற்கு சிறந்தது என சொல்லப்படுவதால் அதனை அதிக விலைக்கொடுத்தும் வாங்கி வீடுக்கட்ட பொதுமக்கள் பலரும் முனைப்பு காட்டுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, பணத்திற்காக கொள்ளிடக்கரையோரம் உள்ள இளைஞர்கள் நூதன முறையில் தங்களது இருசக்கர வாகனத்தில் மூலம் கொள்ளிடம் ஆற்றில் மணலை அள்ளிச்சென்று திருட்டு தனமாக விற்பனை செய்துவருகின்றனர்.
தங்களது இருசக்கர வாகனத்தில் சிமெண்ட் சாக்குகள் மூலம், கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணலை திருடி விற்பனை செய்து ஈடுப்படுகின்றனர். 80 மணல் மூட்டை ஒரு யூனிட் என கணக்கிடப்பட்டு, ஒருமுறை இருசக்கர வாகனத்தில் 4 மூட்டைகள் வீதம் கடத்தி கொண்டு போய் உரியவரிடம் சேர்ப்பார்கள், இதுபோன்று 80 சாக்கு பைகளில் ஒரு யூனிட் மணல் கடத்தி 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனிடையே மணல்மேடு காவல்துறையினருக்கு இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மணல்மேடை அடுத்த விராலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சிமெண்ட் சாக்குகளில் மூட்டையாக மணலை பைக்கில் ஏற்றி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் சிமெண்ட் சாக்குகளில் இளைஞர்கள் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணலை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 இளைஞர்களை கைது செய்து, மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து இளைஞர்களை சிறையில் அடைத்தனர். இருசக்கர வாகனங்களில் யூனிட் கணக்கில் மணல் கடத்திய சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பல ஆண்டு காலமாக இப்பகுதிகளில் ஆற்றுமணல் கடத்துவதே தொடர்கதையாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி மணல் குவாரிகளுக்கு உரிமம் பெற்று அமைக்கப்படும் குவாரிகளும் அரசு விதிமுறைகளுக்கு மீறி அளவுக்கு அதிகமான ஆழத்திற்கு மணல் எடுப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு மணல் கடத்தலை தடுக்கும் விதமாக அரசு குவாரிகளுக்கு மீண்டும் அனுமதி அளித்து, மணல் குவாரிகளை ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர்.