விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சின்னக் கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் வாலிபர் ரத்த காயங்களுடன் கிடப்பதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை செய்யும் நோக்கில் தலையில் பீர் பாட்டிலால் குத்தியும், கல்லால் தாக்கியும் ரத்த காயங்களுடன் கிடந்த வாலிபரை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு புதுவை அரசு மருத்துவமையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் அந்த வாலிபர் பரிதாபமாக இறந்து உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர்.




விசாரணையில் அந்த வாலிபர் வானூர் அருகே உள்ள சின்னக் கோட்டக்குப்பம் சத்யாநகர் பகுதியை சேர்ந்த ராஜாவின் மகன் செல்வக்குமார் (வயது 32) என்பது தெரிய வந்தது. விசாரணையில் கட்டிட தொழிலாளியான செல்வக்குமாருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வக்குமாரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது செல்வக்குமாரை அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான குப்பன் என்ற குப்புசாமி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்துள்ளதும், கொலைக்கான காரணமும் தெரியவந்தது.



செல்வக்குமாரின் மனைவி சித்ராவின் தங்கையை குப்புசாமி திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் குப்புசாமி ரவுடியாக இருப்பதால் இதனை செல்வக்குமார் ஏற்கவில்லை. மேலும் தனது மனைவியின் தங்கையை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தார். இதனால் செல்வக்குமார் மீது குப்புசாமி ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். 



ஒரு கட்டத்தில் செல்வக்குமாரை கொலை செய்யவும் முடிவு செய்தார். இதனை தனது கூட்டாளிகளிடம் கூறி செல்வக்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். குப்புசாமி தனது கூட்டாளிகளுடன் புதுவையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து அங்குள்ள முந்திரி தோப்பில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போது செல்வக்குமாரை தீர்த்து கட்ட இதுவே தக்க சமயம் என்று கருதிய குப்புசாமி மது குடிக்க வருமாறு செல்வக்குமாரை அழைத்துள்ளார். செல்வக்குமார் அங்கு சென்ற போது அவருக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி கொடுத்துள்ளனர். செல்வக்குமார் போதையில் இருந்த போது அவரை குப்புசாமி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தலையில் பீர் பாட்டிலால் குத்தியுள்ளனர். மேலும் செல்வக்குமார் உயிர் பிழைக்கக்கூடாது என்று அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து செல்வகுமாரின் தலையில் போட்டுவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குப்புசாமி மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர் . இந்தநிலையில்  கொலை தொடர்பாக குப்புசாமி, விஜி, சேது, கன்னியப்பன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்,. பின்னர் அவர்களை வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.