கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சின்னம்மா லே அவுட் பகுதியை சேர்ந்தவர் கென்னட் ஐவான் என்பவரின் மகன் லென்னட் பிராங்க்ளின் (39). எலக்ட்ரீஷியன் வேலை செய்யும் இவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் கடந்த 22ஆம் தேதி முதல் அறை எடுத்து தங்கி இருந்தார். 28ஆம் தேதி காலை அறையில் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் லென்னட் பிராங்க்ளின் சடலமாக கிடந்தார். அவரின் உடலின் அருகே உடைந்த நிலையில் ஒரு தலைக்கவசமும் இருந்தது. 


பிராங்க்ளின் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்த தஞ்சை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி போலிசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் லென்னட் பிராங்களின் தங்கி இருந்த அறைக்கு குடிபோதையில் 4 பேர் வந்து சென்றது, அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம்  தெரிய வந்தது.



இதனையடுத்து கேமராவில் பதிவான நபர்களை போலிசார் தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் விசாரணையில், லாட்ஜ் அறைக்கு வந்த தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த அருண் லிவிங்ஸ்டன் (23), ஆடக்காரத்தெருவை சேர்ந்த முகமது ஹசன்காதர் (24), மகர்நோன்புச்சாவடியை சேர்ந்த பிரவீன்குமார் (18), மானம்புச்சாவடி குஜிலிய மண்டபத்தெருவை சேர்ந்த தினகரன் (22) ஆகிய  நான்கு பேரும் வந்து சென்றது தெரிய வந்தது. பின்னர்  போலீசார். நான்கு பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.



போலீசார் விசாரணையில், 4 பேரும், கடந்த 27ஆம் தேதி இரவு லென்னட் பிராங்களின் அறைக்கு சென்றுள்ளனர்.  அங்கு நான்கும் பேரும் லென்னட் பிராங்ளின் உடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அதிக போதையினால், லாட்ஜில் தங்கி இருந்த ஒரு வெளி மாநில விபசார  விலைமாதுவிடம், முதலில் யார் உல்லாசம் அனுபவிப்பது என்ற போட்டி வந்தது. ஆனால் அப்பெண் ஒத்துக்கொள்ளாமல், சண்டைபோட்டுள்ளார். இது குறித்து  லென்னட் பிராங்ளினிடம், அப்பெண் கூறவே,  நான்கு  பேருக்கும், லென்னட் பிராங்ளினுக்கும்  இடையே தகராறு ஏற்பட்டது.  



தகராறு முற்றியது தெரிந்தவுடன் அப்பெண் அறையை விட்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர் வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது  நான்கு பேருக்கும் போதை தலைக்கேறியதால், ஆத்திரமைடந்த வெறியுடன்,  லென்னட் பிராங்க்ளினை தாக்கி தள்ளி விட்டுள்ளனர். அதில் தலை சுவரில் மோதியதில் லென்னட் பிராங்க்ளின் இறந்துள்ளார்.



உல்லாசமாக இருக்க முடியாமல் போய்விடுமோ, என்று அவரை தள்ளி விட்டோம். ஆனால் அவரை கொலை செய்யவேண்டும் என நாங்கள் தள்ளி விடவில்லை என 4 பேரும் கூறி போலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தஞ்சை பகுதியில் விபச்சாரம் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஒய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டரின் கணவர், இது போன்ற தொழில் செய்து வருவது, போலீசாருக்கும் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையை அளிக்கிறது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.