மதுரையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வினோத்குமார் (21) மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் அவர் டென்னிஸ் வீரராகவும் இருந்துள்ளார்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு வரை விடுதியில் சக மாணவர்களுடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்த வினோத், காலையில் அறையில் இல்லாமல் இருந்துள்ளார். அவரை காணாமல் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் விடுதி முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது ஒரு அறைக்கதவு மட்டும் உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்து உள்ளே சென்ற மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு வினோத் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஃப்ரீ பயர், ஆன்லைன் ரம்மி ஆகிய விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட வினோத், அதில் அதிகளவில் பணத்தை இழந்ததால் விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட பெற்றோரிடம் அடிக்கடி பணம் வாங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் பணம் கேட்டதற்காக அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் லோன் ஆப் மூலம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணைய விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 15 நாட்களில் மட்டும் 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் தற்கொலை எண்ணிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 37 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் ஆன்லைன் ரம்மியை தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இதனை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)