தஞ்சாவூர்: அடப்பாவி ஆசன வாயில் வைத்து கடத்திக்கிட்டா வர்ற என்று அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். அப்படி அவர் கடத்தி வந்தது என்ன தெரியுங்களா? வேறு என்ன தங்கம்தான்.


திருச்சி விமான நிலையம்:


தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள திருச்சியில் சர்வதேச விமான நிலையம் இருந்து வருகிறது. இந்த திருச்சி விமான நிலையத்தில் இருந்து தற்போது சார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துக்கு வாரம் 62 விமானங்கள் இயக்கப்படுகிறது. பெரிய அளவிலான விமானங்கள் இயக்க போதிய ரன்வே இல்லாத போதும் அதிக அளவிலான விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.


பயணிகள் சேவையில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த 2023-24-ம் ஆண்டில் சிங்கப்பூருக்கான பயணிகள் போக்குவரத்தில் இந்திய விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையம் இருந்து சுமார் 5.5 லட்சம் பயணிகள் கையாண்டு 4-வது இடமும், இதேபோல் கோலாலம்பூர் சேவையில் சுமார் 3.4 லட்சம் பயணிகளை கையாண்டு 3-வது இடத்தை திருச்சி சர்வதேச விமான நிலையம் பிடித்துள்ளது திருச்சி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, ஆகிய 5 மெட்ரோ விமான நிலையங்கள் தென்கிழக்கு ஆசியாவுடனான பயணிகள் போக்குவரத்தில் திருச்சியை விட அதிக அளவில் பயணிகள் போக்குவரத்தை கையாண்டு இருக்கின்றன. இந்த நிலையில் திருச்சி-மலேசியா விமான சேவையில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஏர் ஏசியா மற்றும் மலிண்டோ விமான நிறுவனங்கள் கூடுதல் சேவை அளிக்க தற்போது முன் வந்து இருக்கின்றன. இதன் மூலம் அதிகளவிலான சேவைகள் வரும் நாட்களில் இயக்கப்படும்.


இப்படி பெருமைகள் நிறைந்த திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கம் கடத்தி வந்து சிக்குவது அடிக்கடி நடந்து வருகிறது. தினுசு தினுசா யோசிச்சு தங்கம் கடத்தி வருகின்றனர். அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர், தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாகிறது. கடத்தல் கும்பல் புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டாலும், அதிகாரிகள் அதனை கண்டறிந்து கைப்பற்றி கைது செய்து வருகின்றனர்.


அப்படிதான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருச்சி விமான நிலையத்துக்கு, அமீரக நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த நபர், சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டுள்ளார். அவரது நடவடிக்கைகளை உற்று கவனித்த அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்துக் கொண்டே இருந்துள்ளது. 


உடன் அவரை பிடித்து அதிகாரிகள்  சோதனை செய்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. ஆமாங்க... சேப்டி லாக்கரில் வைக்கும் தங்கத்தை ஆசனவாயில் பசை வடிவிலான உருண்டைகளாக கடத்தி வந்து இருக்கார். ரூ.70.71 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. சுமார் 780 கிராம் அளவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த இளைஞரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.