எனக்கே நடிப்பு சொல்லித்தரியா...கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கமல்...வசமாக சிக்கிய வசந்தபாலன்
இந்தியன் படப்பிடிப்பின் போது நடிகர் கமல்ஹாசன் கோபத்தின் உச்சத்திற்கு சென்று கத்திய நிகழ்வு குறித்து இயக்குநர் வசந்தபாலன் பகிர்ந்துகொண்டுள்ளார்

ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக புதிய உச்சத்தை தொட்ட படம் இந்தியன். இப்படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் கமல்ஹாசன் கோபத்தின் உச்சத்திற்கு சென்றதையும் இயக்குநர் வசந்தபாலன் பகிர்ந்துகொண்டுள்ளார்
இந்தியன் படப்பிடிப்பில் கமல் கோபம்
" கமல் சாருக்கு என்ன பார்த்தாலே பிடிக்காது. அதற்கு காரணம் இந்தியன் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம்தான். ஒரு காட்சியில் கமலை நெடுமுடி வேணு கைது செய்து தனது வீட்டில் அடைத்து வைத்திருப்பார். கமலின் கையும் காலும் சங்கிலி போட்டு கட்டியிருக்கும். அங்கிருந்து கிச்சலில் இருக்கும் சிலிண்டர் வரை சென்று அதில் இருந்து அந்த சங்கிலியை உடைத்துக் கொண்டு தப்பிக்க வேண்டும் என்பது தான் காட்சி. முதலில் இந்த காட்சியை நாங்கள் ஒத்திகை பார்த்தோம். என் கைகால்களை சங்கிலி போட்டு கட்டினார்கள். நான் இரண்டே தாவில் சிலிண்டர் வரை சென்று சங்கிலியில் இருந்து தப்பிவிட்டேன். பின் கமல் வந்து ஷாட் எடுத்தோம். கமல் மெதுவாக ஊர்ந்து வந்தார். ஃபிலிம் ஓடிக் கொண்டிருந்தது. ஷங்கருக்கு ஓக்கேவாக இல்லை. கமலிடம் என்னை செய்துகாட்ட சொன்னார். நானும் அவரிடம் செய்துகாட்டினேன். உடனே கமல் கோபத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார். நான் வயதான ஒரு கதாபாத்திரத்தில் இருக்கிறேன். நான் எப்படி இதை செய்ய முடியும் , நடிப்புனா என்னனு தெரியுமா அது இது என அவருக்கு தெரிந்த எல்லா மொழியிலும் என்னை திட்டினார். ஷங்கர் உட்பட செட்டில் இருந்த எல்லாரும் ஓடிவிட்டார்கள். கை கால்களில் சங்கிலி கட்டப்பட்டிருக்க கமல் என்னை சுற்றி நடந்து திட்டிக் கொண்டிருந்தார்.
Just In
திட்டிவிட்டு வெளியே போய்விட்டார். அதன்பிறகு என்னை விடுவித்தார்கள். அவர் திட்டியதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என ஷங்கர் சொல்லிவிட்டார் ஆனால் ரொம்ப அசிங்கமாக போய்விட்டது. அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு செல்லவில்லை. இவ்வளவு பெரிய படத்தில் என் பெயர் வராமல் போய்விடக் கூடாது என்பதால் மறுபடியும் படப்பிடிப்பிற்கு சென்றேன். அதன் பிறகு வெயில் படம் வெளியானபோது கமல் என்னை பாராட்டினார். ஆனால் அவர் என்னை திட்டியது அவருக்கு ஞாபகம் இல்லை. " என வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.