காதலித்ததால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட பெண் ஒருவர், அங்கிருந்து தப்பி தான் காதலித்த நபரையே திருமணம் செய்த சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சென்னித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா. 21 வயதான இவரும் பக்கத்து ஊரான கரவிளாகம் பகுதியில் வசித்து வரும் அனீஷ் என்பவரும் பள்ளியில் படித்த சமயத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், அனீஷ் 10 ஆம் வகுப்புடன் படிப்பதை நிறுத்தி விட்டார். பின்னர் வெளிநாட்டுக்குச் சென்று எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார்.
இதற்கிடையில் கருங்கல் பகுதியில் உள்ள கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்த ராதிகாவும் செல்போன் வழியாக அனிஷூடன் காதலை வளர்த்து வந்துள்ளார். இப்படியான நிலையில் காதம் விவகாரம் இருவருடைய பெற்றோருக்கும் தெரிய வந்தது. வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை திருமணம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ராதிகாவின் பெற்றோர் அவரை படிக்க அனுப்பாமல் வீட்டுச்சிறையில் வைத்தனர்.
அதேசமயம் அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்தும் வந்துள்ளனர். இதுதொடர்பாக காதலன் அனீஷிடம் ராதிகா பேசியுள்ளார். உடனடியாக வெளிநாட்டில் இருந்து வந்து தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு அனீஷ் வெளிநாட்டில் இருந்து கன்னியாகுமரி வந்துள்ளார். பின்னர் தன் நண்பர்களுடன் வீட்டுச்சிறையில் உள்ள ராதிகாவை மீட்பது குறித்து திட்டம் தீட்டியுள்ளார்.
காதலியிடமும் எப்படியாவது வீட்டை விட்டு வெளியேறினால் மற்றதை தான் பார்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனிடையே 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் பாத்ரூம் செல்வதாக கூறி ராதிகா, சுவர் ஏறி குறித்து வீட்டை விட்டு வெளியேறினார். அங்கு பைக்குடன் தயாராக இருந்த அனீசுடன் அவர் தப்பிச் சென்று விட்டார். இருவரும் நண்பர்கள் புடைசூழ கரவிளாகம் பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் செய்துக் கொண்டனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராதிகா பெற்றோர், அவரை அனீஷ் கடத்திச் சென்று விட்டதாக மார்த்தாண்டம் போலீசில் புகாரளித்தனர். இதனைக் கேள்விப்பட்ட தம்பதியினர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தையில் திருமண கோலத்தில் தஞ்சமடைந்தனர். தாங்கள் இருவரும் சேர்ந்து வாழப் போகிறோம் என்பதில் உறுதியாக இருந்ததால் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ராதிகா - அனீஷ் இருவரும் சேர்ந்து வாழ அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.