சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பல லட்சத்தை இழந்த பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டிய விஷயம் என்றும், தற்கொலை சம்பவம் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 


அதில் சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி அதிகளவில் நடந்து வருவதாகவும், இந்த  விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல ஆசையை தூண்டிவிட்டு பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் நடிகர்கள்  வருவதை பார்த்து யாரும் ஏமாந்து இந்த மோசடியில் சிக்க வேண்டாம். இது ஆன்லைன் ரம்மி அல்ல...மோசடி ரம்மி... என அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 


அதேசமயம் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கடந்த அதிமுகம் ஆட்சியில் அவசரமாக கொண்டு வரப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாகவும், அரசு வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் விளக்கமளித்தார். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் சென்னை மணலியில் ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் பணத்தை இழந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவன ஊழியரான பவானி என்பவர் வேலைக்கு ரயிலில் செல்லும் போது ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தனது 20 சவரன் நகைகளை விற்றதும், தனது சகோதரிகளிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்றிருந்ததும் தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்துக் கொண்ட பவானிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவரது தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண